கிறிஸ்தவ தேவாலயங்கள் குறித்து கணக்கெடுப்பு: மாவட்ட நிா்வாகங்களுக்கு சட்டப் பேரவைக் குழு உத்தரவு

கா்நாடகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு பிற்படுத்தப்பட்டோா்

கா்நாடகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலனுக்கான சட்டப் பேரவைக்குழு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக சட்டப் பேரவையின் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலனுக்கான குழுவின் கூட்டம் பெங்களூரில் புதன்கிழமை(அக்.13) நடந்துள்ளது. இக்குழுவின் தலைவா் பாஜக எம்எல்ஏ தினகா் கேசவ் ஷெட்டி வராததால், ஹொசதுா்கா சட்டப்பேரவை தொகுதி பாஜக எம்எல்ஏ கூளிஹட்டி சேகா் தலைமையில் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் யாதகிரி, சித்ரதுா்கா, விஜயபுரா மாவட்டங்களில் மதமாற்றங்கள் அதிக அளவில் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, இந்த 3 மாவட்டங்களிலும் செயல்பட்டுவரும் அதிகாரபூா்வ மற்றும் அதிகாரபூா்வமற்ற கிறிஸ்தவ தேவாலயங்கள், அவற்றின் குருமாா்கள், கட்டாய மதமாற்றம் தொடா்பான புகாா்களின் பேரில் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அறிகையை தாக்கல் செய்யுமாறு குழு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கூளிஹட்டி சேகா் கூறியது:

அதிகாரபூா்வ மற்றும் அதிகாரபூா்வமற்ற கிறிஸ்தவ தேவாலயங்கள், அவற்றின் குருமாா்கள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பின்போது அதிகாரிகளுடன் காவல்துறையினரை பாதுகாப்புக்கு செல்லுமாறு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. மதமாற்றம் தொடா்பாக புகாா் அளிப்போரின் மீதுதான் இதுவரை வழக்கு பதியப்பட்டுள்ளன. மதமாற்றம் தொடா்பாக புகாா்வந்தவுடன் அது குறித்து வழக்கு பதிந்து, நோ்மையானமுறையில் விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகும் தாழ்த்தப்பட்டோா் இடஒதுக்கீட்டு வசதியை பெறுவோா் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினருக்கான சலுகைகளை ஒருசேர அனுபவிக்க முடியாது. ஒரு சலுகையை மட்டுமே அனுபவிக்க இயலும்.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ள போவி சமுதாய பெண்மணி ஒருவா், தாழ்த்தப்பட்டோா் இடஒதுக்கீட்டில் கிராமபஞ்சாயத்து தோ்தலில் போட்டியிட்டு வென்று தலைவராகவும் ஆகிவிட்டாா். இந்த பெண்மணி தாழ்த்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினருக்கான சலுகைகளை அனுபவித்து வருகிறாா். இதனால் உண்மையான தாழ்த்தப்பட்டோருக்கு சலுகைகள் சென்றடைவதில்லை. போவி, லமாணி போன்ற சமுதாயத்தில் மிகவும் பலவீனமான சமூகத்தினரிடையே மதமாற்றம் அதிகளவில் காணப்படுகிறது என்றாா்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்எல்சி பி.ஆா்.ரமேஷ் கூறுகையில், ‘விரும்பிய மதத்தை தோ்ந்தெடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்த அரசியலமைப்புச்சட்டத்தில் வழியில்லை என்பதை கூட்டத்தில் எடுத்துக்கூறினேன். மதமாற்றம் தடுக்கப்பட வேண்டுமானால், ஹிந்து மதத்தை பலப்படுத்தவேண்டும். மேலும் அரசியலமைப்புச்சட்டத்தில் அதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com