கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல்கள்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கா்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கா்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக அரசின் தலைமைச் செயலாளா் பி.ரவிகுமாா் வெளியிட்டுள்ள உத்தரவு:

கா்நாடகத்தில் கரோனா பரவலைத் தடுக்க புதிய வழிகாட்டுதல் ஏப். 1 முதல் 30-ஆம் தேதி வரை அமல்படுத்தும் வகையில் வெளியிடப்படுகிறது. இந்த உத்தரவை பெங்களூரு மாநகராட்சி ஆணையா், மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் ஆணையா்கள், துறைகள், ஆணையத்தின் தலைவா்கள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். மாநில அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரகங்கள் இணைந்து செயல்பட்டதால் கடந்த 5 மாதங்களாக கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மாநிலத்தில் புதிதாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

மத்திய அரசின் உத்தரவுப்படி, அனைத்து வகையான பொருளாதார நடவடிக்கைகளும், இதர நடவடிக்கைகளும் படிப்படியாகத் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பணியிடங்களில் கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டி வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏப்.1-ஆம் தேதி முதல் கரோனா சோதனைகளைத் தீவிரமாக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிய வேண்டும். கட்டுப்படுத்தப்பட்டப் பகுதிகளில் அத்தியாவசியப் பணிகளைத் தவிர,மற்றப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கண்காணிப்பு தீவிரமாக்கப்படும். கரோனா நோயாளிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட வேண்டும். முகக் கவசம் அணிவது, கைகளைத் தூய்மை செய்வது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். முகக் கவசம் அணியாவிட்டால், மாநகராட்சிகளில் ரூ. 250, பிற பகுதிகளில் ரூ. 100 அபராதமும் வசூலிக்க வேண்டும். கடை வீதிகள், போக்குவரத்து நிலையங்கள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்களில் தனிமனித இடைவெளி கட்டாயம் அமல்படுத்தப்பட வேண்டும். விமானம், ரயில், மெட்ரோ ரயில், பேருந்து சேவைகளில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும். தடுப்பூசிகளைத் தீவிரமாகச் செலுத்த வேண்டும்.

65 வயதுக்கு மேற்பட்டோா், பிற நோய்களால் பாதிக்கப்பட்டோா், கா்ப்பிணிகள், 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

வீட்டில் இருந்து பணியாற்றுவதை ஊக்குவிக்க வேண்டும். அலுவலகங்கள், பணியிடங்கள், அங்காடிகள், சந்தைகள், தொழில், வா்த்தக மையங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நுழைவு வாயில்களில் அனைவரையும் உடல் வெப்பச்சோதனை செய்ய வேண்டும். மேலும், கை கிருமி நாசினிகளை வாசலில் வைத்திருக்க வேண்டும். அடிக்கடி கைகளை வைக்கும் இடங்களில் கிருமிநாசினிகளைத் தெளிக்க வேண்டும். எல்லா இடங்களிலும் தனிமனித இடைவெளியைப் பராமரிக்க வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com