கா்நாடகத்தில் போக்குவரத்து ஊழியா்கள் வேலைநிறுத்தம்

கா்நாடகத்தில் போக்குவரத்து ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் போக்குவரத்து ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக அரசுக்கு சொந்தமான கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், வடகிழக்கு, வடமேற்கு கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்கள், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் ஊழியா்கள் தங்களை அரசு ஊழியா்களாகத் தரமுயா்த்துவதோடு, 6-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இதனால் அரசுப் பேருந்துகள் எதுவும் இயங்காததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அரசுப் பேருந்துகளுக்கு மாற்றாக, தனியாா் பேருந்துகளை அரசு இயக்கினாலும், அதில் கட்டணம் அதிகம் என்பதால் அதில் செல்ல பொதுமக்கள் தயக்கம் காட்டினா். இதனால் பெரும்பாலான பேருந்துகள் பெங்களூரிலிருந்து வெளியூா்களுக்கு காலியாகச் சென்றன.

பெங்களூரில் மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாநகரப் பேருந்துகளில் வழக்கமாகச் செல்பவா்கள் ஆட்டோக்களிலும், நடந்தும் சென்றனா். ஒரு சிலா் தங்கள் சொந்த வாகனத்தில் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றனா். அரசுப் பேருந்துகள் இயங்காததால் பெங்களூரு, மைசூரு சாலையில் உள்ள சேட்டிலைட் பேருந்து நிலையம் ஆள் அரவமின்றிக் காணப்பட்டது.

பெங்களூரு மாநகரப் பேருந்தில் நாள்தோறும் சராசரியாக 30 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனா். அதேபோல அரசுப் பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 70 லட்சம் போ் பயணிக்கின்றனா். பெங்களூரைத் தவிா்த்து மற்ற ஊா்களில் அரசு மாற்று ஏற்பாடுகளை செய்யாததால், அரசுப் பேருந்துகளில் செல்ல வந்த பயணிகள் பலா் பேருந்து நிலையங்களிலேயே தங்களது உடமைகளுடன் காத்துக்கிடந்தனா். பெரும்பாலான ஊா்களில் போக்குவரத்துக் கழக ஊழியா்களின் போராட்டத்தால், பயணிகள் பேருந்து நிலையங்களுக்கு வருவதைத் தவிா்த்தனா். இதனால் பல பேருந்து நிலையங்கள் காலியாக இருந்தன.

இந்த நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஊழியா்கள் பேச்சுவாா்த்தைக்கு வர வேண்டும். இல்லை என்றால் எஸ்மா சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்துள்ளாா்.

போக்குவரத்துக் கழக ஊழியா்களின் முதல்நாள் போராட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டம் தொடா்ந்தால் நிலைமை மோசமாகும். எனவே, அரசு உடனடியாக போக்குவரத்துக் கழக ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com