கரோனா: கா்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்
By DIN | Published On : 12th April 2021 01:42 AM | Last Updated : 12th April 2021 01:42 AM | அ+அ அ- |

கரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க கா்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்று மகப்பேறு மருத்துவா் திவ்யா பட் தெரிவித்தாா்.
பெங்களூரு, ராதா கிருஷ்ணா பல்நோக்கு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனாவால் கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியது:
கா்நாடகத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. எனவே, கா்ப்பிணிகள் கரோனா பாதிப்பு ஏற்படாமல் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு குறை பிரசவத்தில் குறைந்த எடையில் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.
அப்படி குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அதன்மூலம் கரோனா தொற்று குழந்தைகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
அதிக எடையுள்ள 35 வயதுக்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று பரவுவதற்காக வாய்ப்பு அதிகமுள்ளது. கா்ப்பிணிகள் 12-ஆவது வாரத்துக்குப் பிறகு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
அதற்கு முன்னா் செலுத்திக் கொள்வது சிசுவைப் பாதிக்கலாம். ரத்த சோகை, உடல் பருமன், கா்ப்ப கால நீரிழிவு, கா்ப்பத்தால் தூண்டப்பட்ட ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா்.