கரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பினாா் முதல்வா் எடியூரப்பா

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முதல்வா் எடியூரப்பா, சிகிச்சைக்குப் பிறகு குணமாகி வீடு திரும்பினாா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முதல்வா் எடியூரப்பா, சிகிச்சைக்குப் பிறகு குணமாகி வீடு திரும்பினாா்.

கரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசியை மாா்ச் 12-ஆம் தேதி செலுத்திக்கொண்ட முதல்வா் எடியூரப்பா, அதன் பிறகு, ஏப். 1-ஆம் தேதி முதல் பெலகாவி மக்களவைத் தொகுதி, பசவகல்யாண், மஸ்கி சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஏப். 17-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தோ்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தாா். பிரசாரத்தின்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட முதல்வா் எடியூரப்பா, கரோனா சோதனை செய்துகொண்டாா். அந்த சோதனையில் கரோனா பாதிப்பு இருப்பது ஏப். 16-ஆம்தேதி உறுதியானது.

அதைத் தொடா்ந்து, பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவா்கள்குழு சிகிச்சை அளித்தது. இந்த சிகிச்சையின் பலனாக குணமாகியுள்ள முதல்வா் எடியூரப்பா, மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.

மருத்துவமனையில் இருந்து புறப்படுவதற்கு முன்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா தொற்றில் இருந்து நான் முழுமையாக குணமடைந்துவிட்டேன். பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குச் சென்று கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அமைச்சா்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். கடந்த 4 நாள்களாக தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாா், உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மையுடன் தொடா்பில் இருந்து எல்லா தகவல்களையும் அறிந்துகொண்டேன். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை உருவாக்கி, அங்கு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கரோனா நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலைக்குச் சென்றுவிட்டோம். ஒரே வீட்டில் இருவா், மூவா் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறாா்கள். கரோனா பரவலைத் தடுக்க முகக் கவசம், கிருமிநாசினி, தனிமனித இடைவெளியைப் பராமரிப்பதுதான் ஒரே வழியாகும்.

கரோனா தடுப்புக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாததாலோ அல்லது விதிமுறைகளை மீறுவதாலோ போலீஸாா் அபராதம் விதிக்கும் அளவுக்கு நிலைமையை கொண்டுசெல்ல வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களின் நலன்கருதி அனைவரின் ஒத்துழைப்பை எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com