பொதுமுடக்கத்தின் போது விதிமீறிய 434 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் ஏப். 28 முதல் மே 12-ஆம் தேதி பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அவசரத் தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாமல், தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதோடு, 434 வாகனங்களை புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனா். இதில் 395 இரு சக்கர வாகனங்கள், 22 மூன்று சக்கர வாகனங்கள், 17 நான்கு சக்கர வாகனங்கள் அடக்கம் என்று பெங்களூரு மாநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது.