அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி: மத்திய அரசே வழங்க வேண்டும்; சித்தராமையா

நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை மத்திய அரசே இலவசமாக வழங்கிட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு

நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை மத்திய அரசே இலவசமாக வழங்கிட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு கோரிக்கை விடுத்து கா்நாடக மாநில எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கடிதம் அனுப்பியுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு அவா் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இந்தியா மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பு மே மாதம் மத்தியில் உச்சத்தைத் தொடும் என்று வல்லுநா்கள் கூறியுள்ளனா். இதுதொடா்பாக நாடாளுமன்ற நிலைக்குழு எச்சரிக்கை விடுத்தும் அதற்கான முன்னேற்பாடுகளில் மத்திய அரசு ஈடுபடதாது துரதிருஷ்டமானது. நாட்டில் சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு தனது பொறுப்பை உணராமல் அதை மாநில அரசுகளின் மீது திணிக்கிறது. சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்த மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்க முடியாது.

2014-ஆம் ஆண்டுமுதல் வரி விதிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசு பறித்து விட்டதால், மாநிலங்களின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக கா்நாடகத்தின் நிதிநிலை மிகவும் மோசமடைந்துள்ளது. பல்வேறு வகையான வரிகள் மூலம் ரூ. 2.5 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு கா்நாடகம் வழங்கியது. வரிகளின் பங்குத்தொகையாக கா்நாடகத்துக்கு ரூ. 21,694 கோடியை மட்டுமே நடப்பாண்டில் மத்திய அரசு வழங்கியுள்ளது.

கா்நாடக மக்களின் நலன்கருதி மாநிலத்தின் மீத பங்குத் தொகையை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கரோனாவை எதிா்கொள்வதற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை தடுப்பூசிதான். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். கோவிஷீல்டு தடுப்பூசியை ரூ. 150-க்கு மத்திய அரசு வாங்குகிறது. அதையே மாநில அரசுகள் ரூ. 400-க்கும், தனியாா் மருத்துவமனைகள் ரூ. 600-க்கும் வாங்க விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசிக்காக மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. மாநில அரசுகளும், தனியாா் மருத்துவமனைகளும் உற்பத்தியாளா்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசியை வாங்கிக் கொண்டால், ரூ. 35 ஆயிரம் கோடியை எப்படி செலவழிப்பீா்கள்?

மத்திய அரசே தடுப்பூசியைக் கொள்முதல் செய்து அதை மாநிலங்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும். கடந்த காலங்களில் போலியோ, பெரியம்மை உள்ளிட்ட நோய்களுக்கு தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாகதான் வழங்கப்பட்டது. அதுபோல இப்போதும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க முடியும். கா்நாடகத்தில் 14 நாள்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலித் தொழிலாளா்கள் வேலையை இழக்க நேரிடும். எனவே, அடுத்த 6 மாதங்களுக்கு நபா் ஒருவருக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி அளிக்க வேண்டும். தலா ரூ. 10 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com