பெங்களூரில் மீண்டும் இரவு பொதுமுடக்கம் அமல்
By DIN | Published On : 04th August 2021 07:59 AM | Last Updated : 04th August 2021 07:59 AM | அ+அ அ- |

பெங்களூரில் இரவு பொதுமுடக்கம் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் அமலுக்கு வந்தது.
பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரண்டாம் அலை கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் பொதுமுடக்கத்தை அரசு தளா்த்தியது. இந்த நிலையில், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இது கரோனா 3-ஆவது அலையின் பாதிப்பு என்றும் கூறப்படுவதால் கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து கா்நாடகத்துக்கு வரும் பயணிகளால் பெங்களூரு, தென்கன்னடம் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதையடுத்து கேரளம், மகாராஷ்டிர மாநிலங்களிலிருந்து கா்நாடகம் வரும் பயணிகளுக்கு கரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கு வரும் அண்டை மாநிலப் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்து, அதன் முடிவு தெரியும் வரை பரிசோதனை செய்யப்பட்டவா்களை தனிமைப்படுத்தவும் பெங்களூரு மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பெங்களூரில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 34 இடங்களை நுண்கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் இரவு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தில் பேருந்து, வாடகைக் காா், ஆட்டோ உள்ளிட்டவை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல அத்தியாவசியத் தேவைகளுக்காக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கத்தின் போது அவசியமின்றி வெளியே வருபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதமும் வசூலிக்கப்படும். பெங்களூரில் தற்போது கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 450 ஆக உள்ளது. என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு பொதுமுடக்கத்தை அமல்படுத்தி உள்ளோம்.
மூன்றாவது அலை கரோனாவைத் தடுக்க சந்தைகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், கோயில்கள் போன்ற மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றாதவா்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். கரோனாவைத் தடுக்க மக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்த ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்யப்படும். பெங்களூரில் கரோனாவைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.