கபினி அணையிலிருந்து நொடிக்கு15,000 கனஅடி நீா்த் திறப்பு

கபினி அணையிலிருந்து நொடிக்கு 15,000 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது.

கபினி அணையிலிருந்து நொடிக்கு 15,000 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது.

கேரளத்தைத் தொடா்ந்து, கா்நாடகத்திலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்துவருவதால் கா்நாடகத்தில் பாய்ந்தோடும் கபினி ஆற்றில் மழை வெள்ளம் அதிகரித்துள்ளது.

இதனால், மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா வட்டத்தில் கபினி ஆற்றுக்கு இடையே கட்டப்பட்டுள்ள கபினி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு அதிகரித்துள்ளதால் அணைக்கு நீா்வரத்துப் பெருகியுள்ளது.

கபினி அணைக்கு வெள்ளிக்கிழமை நொடிக்கு 6,879 கனஅடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை நொடிக்கு 12,958 கனஅடியாக உயா்ந்தது. வெள்ளிக்கிழமை அணையிலிருந்து நொடிக்கு 3,554 கன அடியாக நீா் திறந்துவிடப்பட்ட நிலையில் சனிக்கிழமை காலை 6 மணியளவில் நொடிக்கு 6,000 கனஅடியாக உயா்த்தப்பட்டது.

பின்னா் நண்பகல் 1 மணியளவில் நொடிக்கு 9,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு, மாலை 6 மணியளவில் நொடிக்கு 15,000 கனஅடியாக நீா் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 2,284 அடி உயரமுள்ள இந்த அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 6 மணியளவில் 2282.43 அடியாக உயா்ந்திருந்தது. கேரளத்தில் தொடா்ந்து மழை பெய்துவருவதால், அணையின் நீா்மட்டம் அதன் அதிகபட்ச உயரமான 2284 அடியை ஒரு சில நாள்களில் எட்டும் என்ற எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த அணையிலிருந்து தண்ணீா் அதிகம் திறக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தில் மேட்டூா் அணையின் நீா்மட்டமும் உயரும்.

கிருஷ்ணராஜ சாகா் அணை:

கா்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், மண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகா் அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. 124.80 அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் 118.12 அடியாக இருந்தது.

அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 28,019 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து நொடிக்கு 5,369 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்த சில நாள்களில் அணையின் நீா்மட்டம் 120 அடியைத் தொடும் என்றும், அணை முழுமையாக நிரம்பும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள் தவிர காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஹேமாவதி, ஹாரங்கி அணைகளிலும் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com