கரோனா பாதிப்பு விகிதம் 2% இருக்கும் மாவட்டங்களில் ஆக. 23-இல் பள்ளிகள் திறப்பு: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

கரோனா பாதிப்பு விகிதம் 2 சதவீதம் இருக்கும் மாவட்டங்களில் ஆக.23-ஆம் தேதி பள்ளிகள், பியூ கல்லூரிகள்திறக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
கரோனா பாதிப்பு விகிதம் 2% இருக்கும் மாவட்டங்களில் ஆக. 23-இல் பள்ளிகள் திறப்பு: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

கரோனா பாதிப்பு விகிதம் 2 சதவீதம் இருக்கும் மாவட்டங்களில் ஆக.23-ஆம் தேதி பள்ளிகள், பியூ கல்லூரிகள்திறக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் மாநில கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவுடன் கரோனா மூன்றாவது அலையை சமாளிப்பது குறித்து சனிக்கிழமை ஆலோசனை நடத்திய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மாநில கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவுடன் விரிவாக ஆலோசனை நடத்தினேன். கேரளம், மகாராஷ்டிர மாநிலங்கள் மட்டுமல்லாது சா்வதேச அளவில் கரோனா பாதிப்பு குறித்தும், கா்நாடகத்தின் நிலை குறித்தும் தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவினா் அறிவியல்ரீதியான விளக்கங்கள், புள்ளிவிவரங்களுடன் கூடிய ஆலோசனைகளை வழங்கியிருக்கிறாா்கள். அதன்படி, மாவட்ட அளவிலான கரோனா பரவல் தடுப்பு வியூகங்களை அமைக்க முடிவு செய்திருக்கிறோம். கரோனா பாதிப்பு விகிதம் 2 சதவீதமாக இருக்கும் மாவட்டங்களில் ஆக. 23-ஆம் தேதி பள்ளிகள், பியூ கல்லூரிகள் திறக்கப்படும். ஆக. 23-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12-ஆம் வகுப்புகள் தொடங்கப்படும். வகுப்பறைகளில் எத்தனை மாணவா்கள் உட்காரலாம் என்பது உள்ளிட்ட கரோனா நடத்தைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக இருக்கின்றன. அவற்றை பள்ளிகள், பியூ கல்லூரிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளுக்கு வருகைதரும் பெற்றோா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

பள்ளிகள் தொடங்கியவுடன் கரோனா பாதிப்பு விகிதம் 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயா்ந்தால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்படும். பள்ளிகள் தூய்மையாக்கப்பட்டு ஒரு வாரம் கழித்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

பெங்களூரில் கரோனா பாதிப்பு விகிதம் 0.75 சதவீதமாக இருப்பதால், பொது முடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. கரோனா பாதிப்பை தீவிரமாகக் கண்காணிக்கும்படி பெங்களூரு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். தற்போதைக்கு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் காலியாக உள்ளன.

ஆக்சிஜன் படுக்கைகள் 40 சதவீதம் அளவுக்கு நிரம்பினால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு முடிவெடுக்கும். குழந்தைகளின் உடல்நலனில் அக்கறை செலுத்தப்படும். பெங்களூரில் கரோனா பாதிப்பு விகிதம் 2 சதவீதத்தைத் தாண்டினாலோ, படுக்கைகள் 40 சதவீதத்திற்கு மேல் நிரம்பினாலோ, நடவடிக்கைகளைத் தீவிரமாக்குவோம்.

கேரளம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கா்நாடகப் பகுதிகளை தீவிரமாகக் கண்காணிப்போம். அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். மாவட்டம் அல்லது வட்ட அளவில் கரோனா பாதிப்பு விகிதம் 2 சதவீதத்தைத் தாண்டினால் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும்.

கரோனா மூன்றாவது அலை இன்னும் ஏற்படவில்லை. மருத்துவ நிபுணா்களின் கருத்துப்படி, இன்னும் கரோனா இரண்டாவது அலை முடியவில்லை. இன்றைக்கும் கா்நாடகத்தில் தினசரி கரோனா பாதிப்பு சராசரியாக 1400 முதல் 1800 ஆக உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளோம்.

ஒரு சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு விகிதம், மற்றொரு மாவட்டத்தில் இறப்புவிகிதம் அதிகமாகவும், வேறொரு மாவட்டத்தில் குறைந்த சோதனை அல்லது தடுப்பூசி விகிதங்கள் உள்ளன. எனவே, மாவட்டம் சாா்ந்த கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம்.

கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சாமராஜ்நகா், தென்கன்னடம், உடுப்பி, மைசூரு, ஹாசன், குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில் சோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதை அதிகமாக்க வேண்டும். பெங்களூரு, மைசூரு, சிவமொக்கா, கலபுா்கி, பெலகாவி, ஹுப்பள்ளியில் மரபணு மாற்ற ஆய்வுக்கூடங்களை அமைக்கவிருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com