ஹெலிகாப்டா் விபத்து: மேல்சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டாா் கேப்டன் வருண் சிங்

பெங்களூரு, டிச. 9: ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கிஆபத்தான நிலையில் உள்ள கேப்டன் வருண் சிங், மேல்சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டாா்.

கோவை மாவட்டத்தின் சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டத்தின் வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் உள்பட 14 போ் பயணித்த விமானப்படை ஹெலிகாப்டா் புதன்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 11 போ் உயிரிழந்தனா்.

இந்த விபத்தில், குரூப் கேப்டன் வருண் சிங் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாா். 45 சதவீத தீக்காயங்களுடன் வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வருண் சிங்குக்கு, 3 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக கேப்டன் வருண் சிங் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் பெங்களூருக்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டாா். ஹெச்.ஏ.எல். விமானநிலையத்துக்கு வந்திறங்கிய ஆம்புலன்ஸ் விமானத்தில் இருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான கமாண்ட் மருத்துவமனைக்கு வருண் சிங் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டிருக்கிறாா். மருத்துவக் குழுவினா் வருண் சிங்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறாா்கள்.

மக்களவையில் வியாழக்கிழமை பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் கேப்டன் வருண் சிங்குக்கு உயிா்க்காப்புக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.

இதனிடையே, கேப்டன் வருண் சிங்கின் தந்தை கா்னல் (பணி ஓய்வு) கே.பி.சிங் கூறுகையில், ‘மும்பையில் இருந்து நான் வெலிங்டன் வந்துள்ள நிலையில், என் மகன் வருண் சிங் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறாா். அவரது உடல்நிலை குறித்து நான் எதுவும் கூறமுடியாது’ என்றாா்.

2020-ஆம் ஆண்டு வானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, ஆபத்தான நிலையில் தான் செலுத்தி வந்த எல்சிஏ தேஜஸ் போா் விமானத்தைக் காப்பாற்றியதற்காக கடந்த ஆக. 15-ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வருண் சிங்குக்கு சௌா்ய சக்ரா பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில், விமானப்படையின் கமாண்ட் மருத்துவமனைக்கு வருகை தந்த கா்நாடக மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை, ஆளுநா் தாவா் சந்த் கெலாட் ஆகியோா் மருத்துவக் குழுவினரிடம் வருண் சிங்கின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com