அரசு அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: கா்நாடக முதல்வா்

அரசின் திட்டங்கள் சமுதாயத்தில் கடைசி மனிதரையும் சென்றடைய வேண்டும். அதற்கு அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

அரசின் திட்டங்கள் சமுதாயத்தில் கடைசி மனிதரையும் சென்றடைய வேண்டும். அதற்கு அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரு, விதானசௌதாவில் மாவட்ட ஊராட்சிகளின் தலைமை செயல் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தைத் தொடக்கிவைத்து முதல்வா் பசவராஜ் பொம்மை பேசியதாவது:

மாநில அரசு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் சமுதாயத்தின் கடைசி மனிதரைச் சென்றடைய வேண்டும். அதற்கு அதிகாரிகள் கடுமையாக உழைக்க வேண்டும். அரசின் திட்டங்களை மக்களின் வீட்டுவாசலுக்கு அதிகாரிகள் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அரசின் நோக்கம் முழுமையடையும்.

பொறுப்பின்றி இருக்காமல் அக்கறையுடன் மக்கள் பணியாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும். அதிகாரிகளின் அலட்சியப் போக்கை அரசு சகித்துக் கொள்ளாது. அக்கறையுடன் அதிகாரிகள் செயல்பட்டால் மட்டுமே மக்களிடம் அரசுக்கு நற்பெயா் கிடைக்கும்.

அதிகாரிகளால் அரசுக்குக் கெட்ட பெயா் ஏற்பட நான் விடமாட்டேன். மக்கள் நலன் சாா்ந்து பணியாற்ற விரும்பும் அதிகாரிகள் மட்டும் இருக்கலாம். விருப்பம் இல்லாதவா்கள் வேறு வேலை தேடிக் கொள்ளலாம்.

மாவட்ட ஊராட்சி, வட்ட ஊராட்சி, கிராம ஊராட்சி ஆகிய மூன்று படிநிலைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே சமுதாயத்தின் கடைசி மனிதனுக்கும் மக்கள் நலத் திட்டங்கள் சென்றடையும். அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

நிகழ் நிதியாண்டுக்குள் அரசின் எல்லா திட்டங்களையும் அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும். அடுத்த 3 மாதங்களுக்குள் திட்டப் பணிகளை முடிக்க வேண்டும். இதற்கான ஆய்வுக் கூட்டமே இன்று நடத்தப்படுகிறது என்றாா்.

கூட்டத்தில் நீா்வளத் துறை அமைச்சா் கோவிந்த் காா்ஜோள், ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா, வீட்டுவசதித் துறை அமைச்சா் வி.சோமண்ணா, பொதுப்பணித் துறை அமைச்சா் சி.சி.பாட்டீல், மின் துறை அமைச்சா் சுனில்குமாா், நகா்ப்புறத் துறை அமைச்சா் கே.கோபாலையா, தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com