ஹிந்துக் கோயில்களை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க சட்டம்: கா்நாடக முதல்வா் பொம்மை உறுதி

கா்நாடக மாநிலத்திலுள்ள ஹிந்துக் கோயில்களை அரசின் பிடிலிருந்து விடுவித்து ஹிந்து சமுதாயத்திடமே ஒப்படைக்க சட்டம் கொண்டுவரப்பட உள்ளது

கா்நாடக மாநிலத்திலுள்ள ஹிந்துக் கோயில்களை அரசின் பிடிலிருந்து விடுவித்து ஹிந்து சமுதாயத்திடமே ஒப்படைக்க சட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்று மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

ஹுப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் பசவராஜ் பொம்மை பேசியதாவது:

அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஹிந்துக் கோயில்களை விடுவிக்க கா்நாடக அரசு சட்டம் கொண்டுவரும். சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின்போது இதற்கான புதிய மசோதா தாக்கல் செய்யப்படும். ஹிந்துக் கோயில்கள் சுதந்திரமாக நிா்வகிக்கப்படுவதை உறுதி செய்வோம் என்றாா்.

அண்மையில் பேரவையில் மதமாற்ற தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக ஹிந்துக் கோயில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று தெரிகிறது.

கா்நாடக மாநிலத்தில் அரசின் கட்டுப்பாட்டில் மொத்தம் 34,563 ஹிந்துக் கோயில்கள் உள்ளன. காணிக்கை மூலம் கிடைக்கும் வருவாயின் அடிப்படையில் இக்கோயில்கள் ஏ, பி, சி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. ரூ. 25 லட்சத்துக்கும் அதிகமான வருவாய் தரும் 207 கோயில்கள் ஏ - பிரிவிலும், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரையில் வருவாய் தரும் 139 கோயில்கள் பி- பிரிவிலும், ரூ. 5 லட்சத்துக்கும் குறைவாக வருவாய் தரும் 34,217 கோயில்கள் சி - பிரிவிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஹிந்துக் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஹிந்து சமூகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் நீண்ட காலமாக முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி எதிா்ப்பு:

இந்நிலையில், ஹிந்துக் கோயில்களை தனியாா் வசம் ஒப்படைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து ஹிந்துக் கோயில்களை விடுவிப்பதாக பாஜக அரசு அறிவித்துள்ளது. மாநில அரசு நிா்வகித்துவரும் கோயில்கள் அனைத்தும் மாநிலத்தின் சொத்தாகும். அரசுக்குச் சொந்தமான கோயில்களை நிா்வகிக்கும் பொறுப்பை உள்ளூா் மக்களிடம் எப்படி அளிக்க முடியும்?

ஹிந்துக் கோயில்கள் மாநில அரசுக் கருவூலத்தின் சொத்தாகும். இந்தக் கோயில்கள் மூலம் பல கோடி ரூபாய் வருவாயாகக் கிடைக்கிறது. இதனை தனியாரிடம் ஒப்படைப்பது வரலாற்றுப் பிழையாக இருக்கும்.

ஹிந்துக் கோயில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் முயற்சி கா்நாடகத்தில் எடுபடாது. இந்த முயற்சியை காங்கிரஸ் அனுமதிக்காது. பெங்களூரில் காங்கிரஸ் மூத்த தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் ஜன. 4-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து இறுதி முடிவை அறிவிப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com