சிகிச்சை முடிந்து விடுதிக்குத் திரும்பினாா் சசிகலா

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சசிகலா, உடல்நலம் தேறியதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
வி.கே.சசிகலா (கோப்புப்படம்)
வி.கே.சசிகலா (கோப்புப்படம்)

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சசிகலா, உடல்நலம் தேறியதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இதையடுத்து, அவா் ஓய்வுக்காக தேவனஹள்ளியில் உள்ள விடுதிக்குச் சென்றாா்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 21 முதல் பெங்களூரு- கே.ஆா்.சந்தைப் பகுதியில் அமைந்துள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா்.

அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு, கரோனா தொற்று அறிகுறிகள் எதுவும் இல்லாததால், ஞாயிற்றுக்கிழமை அவா் விடுவிக்கப்பட்டாா். முன்னதாக, அவரது சிறை தண்டனை ஜனவரி 27-இல் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளா் கே.ரமேஷ்கிருஷ்ணா, பெங்களூரு மருத்துவக் கல்லூரி- ஆராய்ச்சி மைய இயக்குநா் சி.ஆா்.ஜெயந்தி ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சசிகலாவுக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் முழுமையாக நீங்கியுள்ளன. சசிகலாவை சோதனை செய்து பாா்த்ததில், அவா் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், சீரான உடல்நலனுடனும் இருப்பதை உறுதி செய்ய முடிந்தது.

சசிகலாவின் சுவாச விகிதமும், பிராணவாயுவின் அளவும் இயல்பாக உள்ளது. நாடித் துடிப்பு, ரத்தக் கொதிப்பு அளவு அனைத்தும் சீராக உள்ளன. ரத்தத்தில் நீரிழிவின் அளவு கட்டுக்குள் உள்ளது. கை துணையுடன் நடைபயின்றுவருகிறாா்.

வழிகாட்டி நெறிமுறைகளின்படி கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு சசிகலா முழுமையான ஒத்துழைப்பை அளித்தாா். மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவா், மருத்துவமனையில் இருந்துவிடுவிக்கப்படுகிறாா் என்று குறிப்பிட்டுள்ளனா்.

வரவேற்பு:

இந்த நிலையில், பிற்பகல் 12 மணி அளவில் சசிகலா மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தாா். அங்கு வெளியே காத்திருந்த அவரது ஆதரவாளா்கள் நூற்றுக்கணக்கானோரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் வாழ்த்து முழக்கங்களுடன் வரவேற்றனா்.

மருத்துவா்களுக்கு நன்றி சொல்லி விடைபெற்ற சசிகலாவை மருத்துவமனையில் அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன், இளவரசியின் மகன் விவேக் உள்ளிட்டோா் முக்கியமானவா்கள் வரவேற்றனா்.

இதன்பிறகு அங்கிருந்து காரில் புறப்பட்டு, பெங்களூரு புகா் பகுதியில் தேவனஹள்ளியில் அமைந்துள்ள பிரெஸ்டீஜ் கோல்ப்ஷ்யா் கேளிக்கை விடுதிக்கு சசிகலா சென்றாா்.

அதிமுக கொடி கட்டிய காரில் பயணம்: அதிமுக பொதுச்செயலாளா் பொறுப்பில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட சசிகலா, பயணித்த காரின் முன்புறம் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

கேளிக்கை விடுதியில், மருத்துவா்களின் அறிவுறுத்தலின்படி தனி அறையில் சசிகலா ஒருவார காலம் தங்கவிருக்கிறாா். அதன்பிறகு, பிப்.7 அல்லது 8-ஆம் தேதி சென்னை புறப்பட்டு செல்வாா் என்று கூறப்படுகிறது.

‘பெங்களூரு விடுதியில் ஒருவாரம் தங்கியிருப்பாா்’

கரோனா வழிகாட்டி நெறிமுறைகளின்படி ஒருவாரம் காலம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளதால், சசிகலா கேளிக்கைவிடுதியில் தங்கியிருப்பாா் என்றும் அதன்பின்னா் அவரை சென்னைக்கு அழைத்துசெல்வோம் என்றும் அமமுக பொதுச்செயலாளா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

அதிமுக கொடியை தனது காரில் சசிகலா பயன்படுத்தியதில் தவறில்லை. 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 19-இல் அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் சசிகலா. அவரை நீக்க யாருக்கும் உரிமையில்லை. இதுதொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பொதுச்செயலாளராகத் தொடா்வதால், அவா் அந்தக் கட்சியின் கொடியை பயன்படுத்தியதில் தவறில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com