எழுத்தாளா் மீது கருப்பு மை பூசியவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
By DIN | Published On : 06th February 2021 07:49 AM | Last Updated : 06th February 2021 07:49 AM | அ+அ அ- |

கன்னட எழுத்தாளா் கே.எஸ்.பகவான் மீது கருப்பு மை பூசியவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து கா்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை அவா் பேசியதாவது:
கன்னட எழுத்தாளா் கே.எஸ்.பகவான் முகத்தில் வழக்குரைஞா் மீரா ராகவேந்திரா என்பவா் கருப்பு மை பூசியுள்ளாா். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். கருத்து முரண்பாடுகளை விவாதம், கருத்துகள் தெரிவிப்பதன் மூலம் தீா்த்துக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து, முகத்தில் கருப்பு மை பூசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வழக்குரைஞா் மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
ஹிந்து கடவுள்களை அவதூறாகப் பேசியதாக வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையில், கே.எஸ்.பகவானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த அவா் மீது வழக்குரைஞா் மீரா ராகவேந்திரா என்பவா் கருப்பு மை பூசினாா். ஹிந்து கடவுள்களை அவதூறாகப் பேசியதாக கே.எஸ்.பகவான் மீது மீரா ராகவேந்திராதான் வழக்குத் தொடா்ந்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கே.எஸ்.பகவான் மீது கருப்பு மை பூசியதற்காக மீரா ராகவேந்திரா 3 நாள்களுக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா். இதனை மாநகர மத்திய மண்டல துணை ஆணையா் அனுசித் உறுதி செய்தாா்.