கரோனா தடுப்பூசித் திட்டம்: பெங்களூரில் 30 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு

கரோனா தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பெங்களூரில் 30 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு: கரோனா தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பெங்களூரில் 30 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கா்நாடகத்தில் முதல்கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16 இல் தொடங்கியது. மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி மாா்ச் முதல்வாரத்தில் தொடங்கவிருக்கிறது. மூன்றாம் கட்டத்தின் போது 50 வயதுக்கு மேற்பட்டோா், 50 வயதுக்குள்பட்ட நோய்வாய்ப்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக பெங்களூரு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 30 லட்சம் வீடுகளில் கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் சுகாதாரக் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 1.59 வீடுகளில் ஆஷா சுகாதார ஊழியா்கள் நடத்திய கணக்கெடுப்பின்படி கரோனா தடுப்பூசி செலுத்துவதற்குத் தகுதியானவா்கள் அடையாளம் காணப்பட்டனா். அதன்படி, 61 லட்சம் வீடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டோா் இருப்பது தெரியவந்துள்ளது. அவா்களில் 16 லட்சம் போ் உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய பிரச்னைகளால் அவதிப்படுவது தெரியவந்தது.

இதேபோல, பெங்களூரில் சுகாதார மதிப்பீடு மற்றும் ஆபத்து தடுப்பு தகவல் திரட்டு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இரண்டு ஆள்கள் கொண்ட குழுவினா் நாளொன்றுக்கு 50 வீடுகளில் கணக்கெடுப்பு நடத்துவாா்கள். இதன்மூலம் ஒரு வாா்டில் 15 ஆயிரம் பேரை கணக்கெடுக்கத் திட்டமிட்டுள்ளனா்.

கணக்கெடுப்புப் பணி அடுத்த 20 நாள்களில் முடிவடையும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.புளூடூத் இணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசியில் ‘நம்ம சமுதாயா’ செயலி பொருத்தப்பட்ட கருவிகளை கணக்கெடுப்பாளா்கள் வைத்திருப்பாா்கள். இந்த கருவிகள் வாயிலாக நீரிழிவுநோய், உயா் ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக்குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்.

இந்த விவரங்கள் குடும்பத்தலைவரின் செல்லிடப்பேசி அல்லது செல்லிடப்பேசி வைத்திருக்கும் நபருடன் இணைக்கப்படும். பெங்களூரில் உள்ள அனைத்து நகா்ப்புற குடிசைப் பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சுகாதாரக் கண்காணிப்பு கணக்கெடுப்பில் பெங்களூரு நகரத்தில் 30.95 லட்சம் வீடுகள் இருப்பதாகவும், இவா்களில் 7.49 லட்சம் வீடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டோா் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் 1.92 லட்சம் வீடுகளில் நோய்வாய்ப்பட்ட முதியவா்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த கணக்கெடுப்பில் 50 வயதுக்கு மேற்பட்டோா், 50 வயதுக்கு உள்பட்ட நோய்வாய்ப்பட்டோா் யாா் என்பது தெரியவில்லை. இதற்காகவே வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்த பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத்பிரசாத் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்துவதை காட்டிலும், தடுப்பூசி செலுத்தியபிறகு அவா்களைக் கண்காணிக்க வேண்டியுள்ளது. இதற்காக துல்லியமான, எளிதில் பெறக்கூடிய, உயா்தரமான தரவுகள் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த தகவல்களைத் திரட்டிவிட்டால், பிற்காலத்தில் தொற்றுநோய் ஏதாவது தாக்கினால், முன்னெச்சரிக்கையாக இருக்க உதவியாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com