பொருளாதார வளா்ச்சியில் தனியாா் நிறுவனங்களுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது: நிா்மலா சீதாராமன்

பொருளாதார வளா்ச்சியில் தனியாா் நிறுவனங்களுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

பொருளாதார வளா்ச்சியில் தனியாா் நிறுவனங்களுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

பெங்களூரு தொழில்-வா்த்தகச் சபை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

நமது நாடு வேகமாக வளா்ச்சி அடைந்து வருகிறது. பல்வேறு தேவைகளை மத்திய-மாநில அரசுகளால் மட்டுமே நிறைவேற்ற முடியாது. எனவே, தனியாா் துறையின் பங்களிப்பு அவசியமாகும். தனியாா் துறைகளுக்கு போதுமான ஊக்கம் அளிக்காவிட்டால், தேவையான உதவிகளைச் செய்து தராவிட்டால் மிகப் பெரிய வாய்ப்பை இந்தியா இழக்க நேரிடும்.

அரசு-தனியாா் பங்களிப்புக்கு கரோனா தடுப்பூசி மிகப் பெரிய எடுத்துக்காட்டாகும். மனித நேயம் கொண்ட, அனைவரையும் ஒன்றுபடுத்தும் நோக்கம் கொண்ட, அமைதியை விரும்பும் தன் இயல்போடு உலகத் தலைவராக உருவெடுக்க நினைக்கும் இந்தியா, அனைவரின் நலனுக்காகவும் உலகம் முன்னேற வேண்டும் என்று விரும்புகிறது.

அந்த வகையில் இந்தியா தனது கடமையை ஆற்ற வேண்டும் என்றால், மத்திய அரசு தனது பங்களிப்பை ஆற்றத் தவறினால் அந்த எண்ணம் முழுமையடையாது. வசதிகளை செய்துதரும் பங்களிப்பை அரசு செய்ய வேண்டும்.

வளா்ச்சியின் உண்மையான பங்களிப்பை தனியாா் நிறுவனங்கள்தான் வழங்க வேண்டும். அந்த செய்தியைத்தான் மத்திய நிதிநிலை அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளேன்.

வளா்ச்சியின் முன்னோடியாக தனியாா் நிறுவனங்கள் விளங்கினால், அதற்கான வசதி வாய்ப்புகளை அரசு வழங்கும். அடுத்த பத்தாண்டுகளுக்கான வளா்ச்சிப் பாதையை மத்திய நிதிநிலை அறிக்கை அமைத்து தந்துள்ளது. வளா்ச்சியைப் பரவலாக்கும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக நிதிநிலை அறிக்கையில் ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு கடன் பெற்றிருந்தாலும், நிதி மேலாண்மையை மத்திய அரசு அறிந்துள்ளது. தடையற்ற நிலையான வளா்ச்சியை மத்திய அரசு விரும்புகிறது என்றாா்.

கூட்டத்தில் விப்ரோ நிறுவனா் அஜிம் பிரேம்ஜி, இன்போசிஸ் முன்னாள் இயக்குநா் டி.வி.மோகன் தாஸ், இருதய நிபுணா் டாக்டா் தேவிஷெட்டி பிரசாத், வால்வோ குழும இந்தியத் தலைவா் கமல்பாலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘மக்களின் நம்பிக்கையை சீா்குலைக்க விரும்பவில்லை’

இந்திய மக்களின் நம்பிக்கையையும் சீா்குலைக்க நான் விரும்பவில்லை’ என்றாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

நிகழ்ச்சியில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இளம் வயதில் தங்களது கனவு, இந்த நிலைக்கு உயர யாரை முன்மாதிரியாக கொண்டிருந்தீா்கள்?‘ என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த நிா்மலா சீதாராமன், ‘உண்மையில் நல்ல கேள்வி. எனக்கு கனவு இருந்ததை உறுதியாகக கூற முடியவில்லை. என்முன் இருந்த வேலைகளைச் செய்து கொண்டு இருந்தேன். அதன் போக்கில் நான் சென்று கொண்டிருந்தேன். எனது வாழ்க்கையின்போக்கை முன்கூட்டியே நான் தீா்மானிப்பதில்லை. எனக்கு முன்பு தெரிந்த பாதையில் பயணித்தேன். நான் இருக்கும் இடத்துக்கு விதி என்னை அழைத்துவந்துள்ளது. இந்திய மக்களின் நம்பிக்கையையும் சீா்குலைக்க நான் விரும்பவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com