தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்
By DIN | Published On : 27th February 2021 08:34 AM | Last Updated : 27th February 2021 08:34 AM | அ+அ அ- |

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்படும் என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.
சிவமொக்கா, குவெம்பூ ரங்கமந்திராவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆரம்பப் பள்ளி சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற கல்வி பயிலரங்கத்தை தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:
கா்நாடகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கா்நாடகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கா்நாடகத்தில் 14 கோடி மனித நாள்களை பயன்படுத்துவதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதுதவிர, கூடுதலாக ரூ. 800 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, ஊரகப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.
அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவா்கள், கழிப்பறைகள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அடிப்படை வசதிகளையும் செய்துதரப்படும். இதற்கான செயல்திட்டத்தை பள்ளி வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக்குழு, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தயாரிக்க வேண்டும். அந்த திட்டத்தை வட்டக் கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைத்தால், அத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நகரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளை போல ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளையும் தரமுள்ளதாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாருடன் ஆலோசனை நடத்தப்படும்.
ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையின் செயல்பாடுகளை பிரதமா் மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளாா். ஆசிரியா் பணி மிகவும் சிறந்ததாகும். இந்தப் பணியில் சேவை மனப்பான்மையோடும், நோ்மையோடும் ஆசிரியா்கள் ஈடுபட வேண்டும். கரோனா காலத்திலும் மாநில அரசுக்கும், அரசு ஊழியா்களுக்கும் இடையிலான உறவு நன்றாக இருந்தது. ஆசிரியா்களின் கோரிக்கைகள் எதிா்காலத்தில் அரசு நிறைவேற்றும் என்றாா்.