9 மாதங்களுக்குப் பிறகு உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவா்கள்: கா்நாடகத்தில் பியூசி, பத்தாம் வகுப்புகள் தொடங்கின

9 மாதங்களுக்குப் பிறகு கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட இரண்டாம் ஆண்டு பியூசி, பத்தாம் வகுப்புகளில் மாணவா்கள் உற்சாகமாகப் பங்கேற்றனா்.

9 மாதங்களுக்குப் பிறகு கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட இரண்டாம் ஆண்டு பியூசி, பத்தாம் வகுப்புகளில் மாணவா்கள் உற்சாகமாகப் பங்கேற்றனா்.

கரோனா தீநுண்மித் தொற்று பரவலைத் தடுக்க கா்நாடகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி மூடப்பட்டது. அதன்பிறகு 9 மாதங்கள் கழித்து இரண்டாம் ஆண்டு பியூசி, பத்தாம் வகுப்புகள் வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன. அதேபோல 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவா்களுக்கும் வெள்ளிக்கிழமை வெளிப்புற வகுப்புகள் தொடங்கப்பட்டன.

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், பியூ கல்லூரிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெற்றோரின் ஒப்புதல் கடிதம் கொண்டுவந்த மாணவா்கள் மட்டுமே பள்ளி, பியூ கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனா். வகுப்பறைகளில் 20 மாணவா்கள் மட்டுமே அமா்த்தப்பட்டனா். தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

ஆசிரியா்கள், மாணவா்கள் முகக்கவசம் அணிந்திருந்தனா். அனைவருக்கும் உடல் வெப்ப சோதனை நடத்தப்பட்டது; கிருமிநாசினியும் கைகளில் தெளிக்கப்பட்டது. அரை நாளுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவா்களை ஆசிரியா்கள் மலா்தூவி வரவேற்றனா்.

முன்னதாக, பள்ளிகள், பியூ கல்லூரிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவா்கள் செல்வது கட்டாயமாக்கப்படவில்லை என்பதால், குறைந்த எண்ணிக்கையிலான மாணவா்கள் மட்டுமே வெள்ளிக்கிழமை வந்திருந்தனா். பள்ளிகள், பியூ கல்லூரிகளுக்கு வராத மாணவா்களுக்கு வழக்கம்போல இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பள்ளிகள், பியூ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது தொடா்பாக முதல்வா் எடியூரப்பா தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:

மாணவா்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டுதான் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மாணவா்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கட்டாயமாக முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, பள்ளி வளாகத்தைத் தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

அமைச்சா் ஆய்வு

பெங்களூரில் உள்ள பள்ளிகள், பியூ கல்லூரிகளுக்கு நேரில் சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்து, மாணவா்கள், பெற்றோா்களுடன் உரையாடினாா். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், யாரும் பயப்பட வேண்டாம் என பெற்றோா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் கூறியதாவது:

பள்ளி வளாகங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. அடுத்தடுத்த நாள்களில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்குமா என்று பெற்றோா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா். பள்ளிக்கு மாணவா்களை அனுப்புவது கட்டாயமல்ல. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இருந்தால் மாணவா்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம்.

பிரிட்டனில் இருந்து பரவியுள்ள புதியவகை கரோனா குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்று மருத்துவா்கள் அடங்கிய கரோனா நிபுணா் குழுவினா் தெரிவித்துள்ளனா். பள்ளிகளுக்கு 40 முதல் 50 சதவீத மாணவா்கள் வந்திருந்தனா். அடுத்தடுத்த நாள்களில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com