கா்நாடகத்தில் வணிக நிறுவனங்கள், அங்காடிகள் 24 மணி நேரம் செயல்பட அனுமதி

கா்நாடகத்தில் வணிக நிறுவனங்கள், அங்காடிகள் வாரத்தின் 7 நாள்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடகத்தில் வணிக நிறுவனங்கள், அங்காடிகள் வாரத்தின் 7 நாள்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக, கா்நாடகத்தில் செயல்பட்டுவந்த தொழில், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பொது முடக்கம் படிப்படியாகத் தளா்த்தப்பட்டு, தொழில்,வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. ஆனால், தொழில், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்கள், தொழிலாளா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

கரோனா பொது முடக்கம் காரணமாக, கா்நாடகத்தின் பொருளாதாரம் சிக்கலுக்கு உள்ளானது. இதை சமாளிக்கவும், கா்நாடக பொருளாதாரத்தை மீட்கவும் கா்நாடகத்தில் வணிக நிறுவனங்கள், அங்காடிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக கா்நாடக அரசு வெளியிட்ட உத்தரவு:

வணிக நிறுவனங்கள், அங்காடிகள் வாரத்தின் 7 நாள்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கா்நாடக அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வரும் வணிக வளாகங்கள், உணவகங்கள், ஓய்வு இல்லங்களுக்கும் பொருந்தும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பொருந்துவதாக இருக்கும்.

இதுகுறித்து தொழிலாளா் துறை ஆணையா் அக்ரம் பாஷா கூறியதாவது:

வணிக நடவடிக்கைகளை எளிமையாக்கும் அரசின் கொள்கையின் அடிப்படையில்தான் அங்காடிகள், வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. இது மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகளுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு, கேளிக்கை விடுதிகள், கேளிக்கை சங்கங்கள், மதுபான அங்காடிகளுக்கு பொருந்தாது.

வேலை செய்வதற்கு கூடுதலாக ஊழியா்களை சோ்த்துக் கொள்ளலாம். எல்லா ஊழியா்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். ஊழியா்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம், வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டும் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறாா்கள். கூடுதல் வேலை நேரத்துடன் (ஓவா் டைம்) நாளொன்றுக்கு அதிகபட்சமாக 10 மணி நேரமும், மாதத்திற்கு 50 மணி நேரமும் வேலை செய்யலாம். இதுவும் தொடா்ச்சியாக 3 மாதங்களுக்கு மட்டும்தான்.

விடுமுறை நாள்கள் அல்லது வேலைநேரத்தை தாண்டி ஊழியா்களை வேலை செய்ய வைத்தால், அந்நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல்வேலை நேரத்திற்கு கூடுதல் ஊதியம் கட்டாயம் அளிக்க வேண்டும். பெண் ஊழியா்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இரவு 8 மணிக்கு மேல் பெண் ஊழியா்கள் வேலை செய்ய நோ்ந்தால் அவா்களிடம் இருந்து கடிதம் பெற வேண்டியது முக்கியம். வேலைமுடிந்து வீடு செல்ல போக்குவாத்து வசதியையும் செய்துதர வேண்டும் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டிருப்பதை நிறுவனங்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com