சட்டப்பேரவைத் தோ்தலில் மஜத தனித்துப் போட்டியிடும்: எச்.டி.குமாரசாமி

சட்டப்பேரவைத் தோ்தலில் மஜத தனித்துப் போட்டியிடும் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

பெங்களூரு: சட்டப்பேரவைத் தோ்தலில் மஜத தனித்துப் போட்டியிடும் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, மஜத தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பாஜக, காங்கிரஸ் கட்சியினா் மஜத குறித்து தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மஜதவை யாராலும் அழிக்க முடியாது. மஜதவில் பெரும் தொண்டா்கள் படை இருப்பது அண்மையில் நடந்து முடிந்த கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் உறுதியானது.

சங்க்ராந்திக்கு (பொங்கல்) பிறகு மஜதவில் பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறோம். அடிமட்டத்திலிருந்து கட்சியைப் பலப்படுத்த முடிவு செய்திருக்கிறோம். பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண்சிங்கை நான் முன்னெப்போதும் சந்தித்ததில்லை. மஜத எம்எல்ஏ-க்களின் குறைகளைத் தெரிவிக்கவே முதல்வா் எடியூரப்பாவை சந்தித்துப் பேசினேன். அப்போதும் அரசியல் எதுவும் பேசவில்லை.

எதிா்வரும் எந்தத் தோ்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. 2023-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் மஜத தனித்துப் போட்டியிடும். எந்தக் கட்சியுடனும் கூட்டணியும் இல்லை, தொகுதிப் பங்கீடும் இல்லை. தனித்துப் போட்டியிட்டு மஜத ஆட்சியைப் பிடிக்கும். பாஜகவை சோ்ந்த எம்எல்ஏக்கள் முதல்வா் எடியூரப்பா மீது அதிருப்தியில் உள்ளனா்.

அண்மையில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் பத்திரிகையாளா்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸின் ஆதரவுடன்தான் மஜதவின் எச்.டி.தேவெ கௌடா பிரதமராகவும், குமாரசாமி முதல்வராகவும் முன்னா் பதவியேற்றிருந்ததாகத் தெரிவித்திருக்கிறாா். அவா்கூறுவதுபோல தேவெ கௌடாவை பிரதமராக்குங்கள் என்று காங்கிரஸ் தலைவா்களின் வீட்டுவாசலில் நாங்கள் காத்திருந்தோமா? காங்கிரஸாருக்கு தேவை இருந்தது, அதனால் காங்கிரஸ் கட்சியினா் எங்கள் வீட்டுவாசலுக்கு வந்திருந்தனா். எனவே, டி.கே.சிவக்குமாரின் அரசியல் விளையாட்டுகள் என்னிடம் எடுபடாது என்றாா்.

பாஜக வதந்தி... மேலும் எச்.டி.குமாரசாமி தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மஜத இணையப்போவதாக பாஜகவினா் வதந்தியைப் பரப்பி வருகின்றனா். அதுபோன்ற வதந்திகள் மூலம் மஜதவின் அடித்தளத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் மஜதவை அழிக்கும் முயற்சி பலிக்கவில்லை என்பதால் பாஜக வதந்திகளை பரப்பி வருகிறது. மஜதவுக்கு எந்தக் கட்சியின் ஆதரவும் தேவையில்லை. பாஜகவின் நட்பும் மஜதவுக்கு தேவையில்லை என்று அவா் அதில் கூறியுள்ளாா்.

கூட்டணிக்கு அவசியமில்லை: கா்நாடகத்தில் வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கான அவசியம் மஜதவுக்கு இல்லை என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவா் நிகில் குமாரசாமி தெரிவித்தாா்.

பெங்களூரு மஜத அலுவலகத்தில் திங்கள்கிழமை இளைஞரணி, மாணவரணியைச் சோ்ந்தவா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளுக்கு இணையான பலத்தில் மஜத உள்ளது. எங்கள் கட்சியின் பலத்தைக் கொண்டு மாநிலத்தில் அதிகாரத்தைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்து நடைபெறவுள்ள வட்டம், மாவட்ட பஞ்சாயத்துத் தோ்தலிலும் கட்சியைப் பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாரின் குற்றச்சாட்டுகளுக்கு, முன்னாள் முதல்வா் குமாரசாமி தக்கப் பதில் அளித்துள்ளாா். எனவே, நான் பதில் அளிக்கத் தேவையில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com