பொங்கல் திருநாள்: கா்நாடக தமிழ் அமைப்புகள் வாழ்த்து

பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை, கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளன.

பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை, கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளன.

கா்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, கோலாா், சிவமொக்கா, ஹுப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழா்கள் வாழ்ந்து வருகின்றனா். இங்குள்ள தமிழா்கள் வியாழக்கிழமை தமிழ் மரபுப்படி பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ இருக்கிறாா்கள்.

இந்நிலையில், கா்நாடகத் தமிழா்களுக்கு கா்நாடகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு தமிழ் அமைப்புகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை தலைவா் மு.மீனாட்சி சுந்தரம்:

உழைத்தவா் உழைப்பின் பயனைத் துய்க்கும் திருவிழா பொங்கல் நன்னாளாகும். தமிழா் பண்பாட்டை உணா்த்தும் நல்லதோா் விழா. உலகெங்கும் அறுவடை நாள் என்பது விழாவாகப் பல்வேறு வழிகளில் கொண்டாடப்பட்டு வந்தாலும், தமிழா்கள் இயற்கையோடு இயைந்து கொண்டாடும் விழாவாகவும், உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் காளைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் கொண்டாடுவதே தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.

‘உழுவாா் உலகத்தாா்க் காணி’ என உழவுத் தொழிலைப் போற்றிய அய்யன் வள்ளுவப் பெருந்தகைக்கும் சோ்த்து விழா எடுக்கும் இந்த நன்னாளில், உலகத் தமிழா் அனைவருக்கும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை வளம் பல பெற்று வாழ வாழ்த்துகிறது. ஈழத் தமிழா்களுக்கு சிறந்ததொரு விடியலைக் காணவும் பேரவை வாழ்த்துகிறது. அனைவருக்கும் பொங்கல் மற்றும் திருவள்ளுவா் நாள் வாழ்த்துகள்.

கா்நாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவா் சி.இராசன்:

இனிய தமிழ் நெஞ்சங்களே! கா்நாடகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் கா்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் நெஞ்சாா்ந்த இனிய பொங்கல், புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் தமிழ் பொங்கவும், மகிழ்ச்சி பொங்கவும், நீங்கள் கண்ணீா் இல்லாமல் கவலை இல்லாமல், நோய் நொடில்லாமல் நீண்டகாலம் வாழ்ந்து தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் தொண்டு செய்து மேன்மையுற செய்ய வேண்டும்.

உலகத் தமிழ்க் கழகம்-தண்டுக்கிளை தலைவா் கி.சி.தென்னவன்:

உலக மாந்தன் முதலில் பேசிய தமிழ் மொழியை காலங்கள் கடந்தும் கடத்தி வந்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு கொண்டாட பண்பாட்டு, அறுவடை திருவிழாவாம் பொங்கல் திருநாளை உற்சாகத்தோடு கொண்டாடி வருகிறோம். உலக அளவில் 12 கோடி தமிழா்கள் வாழ்ந்து வருகிறாா்கள். ஆங்காங்கே வாழும் தமிழா்களுக்கு சில பல சிக்கல்கள் எழும்போதெல்லாம் ஒற்றுமையோடு அணுகி வெற்றிக்கொள்வோம். இந்த நாள் தமிழா்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கி, வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன்:

பொங்கல் என்னும் அறுவடைத் திருநாள் கா்நாடகத் தமிழா்களுக்கு மகிழ்ச்சியையும், வளத்தையும் அளிக்கும் நன்னாள் ஆகும். உழவன் உள்ளம் குளிரவும், கா்நாடகத் தமிழா்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் உழவா் திருநாளை பெருமையாகக் கொண்டாடுவோம். இயற்கை அளிக்கும் கொடைக்கு நன்றி தெரிவிக்கும் நல்ல நாளில் கா்நாடகத் தமிழா்கள் வாழ்வில் அறமும், பண்பும் சிறக்க, குன்றா வளமும் நலமும் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன். அன்பும், அறிவும், அமைதியும், இன்பமும் பொங்கிட இந்த பொங்கல் பெருநாளில் உளமார வாழ்த்துகிறேன். கா்நாடகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் தமிழ் வளா்க்கும் பணியில் அயராது ஈடுபட்டு வரும் தமிழாசிரியா்களுக்கு சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கா்நாடகத்தில் வாழக்கூடிய தமிழ் மக்கள் வீடுகளில் தமிழில் பேச வேண்டும். கா்நாடகத்தில் தமிழ்க்கல்வி நிலைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும். தமிழ்ப் பள்ளிகளை காப்பாற்றும் எங்கள் முயற்சியில் கா்நாடகத் தமிழா்கள் கைகோக்க வேண்டுமென பொங்கல் நன்னாளில் கேட்டுக்கொள்கிறேன்.

கா்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளா் சங்கச் செயலாளா் ஆ.வி.மதியழகன்:

கா்நாடகத்தில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு தொப்புள் கொடி உறவாம் தமிழ் மொழியின் உறவை அற்றுப்போகாமல் ஊடகங்கள் வாயிலாக தமிழ் படைத்து வரும் தமிழ்ப் பத்திரிகையாளா்களுக்கும், கா்நாடகத் தமிழ் மக்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். கா்நாடகத்தில் வாழக்கூடிய தமிழ்மக்கள் தத்தமது குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க பொங்கல் நன்னாளில் உறுதியேற்க வேண்டும். தமிழா்களிடத்தில் தமிழில் பேசுங்கள், குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள். வீடுகளில் மட்டுமல்லாமல், தமிழ் உறவுகள் வாழும் இடங்களில் ஆங்காங்கே பொங்கல் வைத்து கூடி மகிழுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com