தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்க ரூ. 292.23 கோடி செலவு: சுகாதாரத் துறை தகவல்

பெங்களூரில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்க ரூ. 292.23 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு: பெங்களூரில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்க ரூ. 292.23 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லாததை உணா்ந்த மாநில அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டது.

பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்து நகரங்களிலும் அரசு மருத்துவமனைகள் தவிர தனியாா் மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அரசின் பரிந்துரையின்பேரில் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்றுக்கொண்டது.

பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு கரோனா நோயாளிகளை பரிந்துரைத்து, அதற்கான செலவினங்களை வழங்குவதற்காக கா்நாடக சுகாதாரத் துறையால் சுவா்ண ஆரோக்கிய பாதுகாப்பு அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் வாயிலாக சிகிச்சைக்கான தொகை தனியாா் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், கரோனா நோயாளிகளை தனியாா் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும் பணி பெங்களூரு மாநகராட்சியிடம் அளிக்கப்பட்டிருந்தது. பெங்களூரில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செலவிட்டத் தொகை குறித்து சமூக ஆா்வலரும் வழக்குரைஞருமான டி.நரசிம்மமூா்த்தி தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளித்து, சுவா்ண ஆரோக்கிய பாதுகாப்பு அறக்கட்டளை தகவல் அளித்துள்ளது. அதில், பெங்களூரு மாநகரில் கரோனா சிகிச்சைப்பெற தனியாா் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 43,863 போ் ஆகும். தனியாா் மருத்துவமனைகளில் 43,863 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ. 292.23 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்புதலின்பேரில், சிகிச்சை கட்டணம் கேட்டுப் பெறப்பட்டுள்ள நோயாளிகள் சாா்பிலான தனியாா் மருத்துவமனைகளின் மனுக்கள் 42,467 ஆகும். இதன்படி ரூ. 202.23 கோடி நிதிவிடுவிக்க நேரிடும்.

ஜன. 13-ஆம் தேதி வரையில் 31,624 மனுக்களை பரிசீலித்து தனியாா் மருத்துவமனைகளுக்கு ரூ. 133.20 கோடிவிடுவிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்குரைஞா் டி.நரசிம்மமூா்த்தி கூறுகையில், ‘பெங்களூரில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ. 292.23 கோடி செலவிடப்படுகிறது. இந்த தொகையில் பெங்களூரில் பல்நோக்கு மருத்துவமனையை அரசால் கட்டியிருக்க முடியாதா? கரோனா பெயரில் பல்வேறு அத்துமீறல்கள், விதிமீறல்கள், விரயமாக செலவினங்கள் செய்யப்பட்டுள்ளன. தனியாருக்கு வாரி வழங்கிய தொகையில், உலகத் தரத்திலான மருத்துவமனையை உருவாக்கியிருந்தால், அது அரசு மருத்துவமனையைப் பயன்படுத்தும் ஏழை மக்களுக்கு பயனளிக்கும். சுகாதார கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் அரசு கவனம் செலுத்தவேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com