பேருந்து அட்டைகளை பெற பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 31st January 2021 01:46 AM | Last Updated : 31st January 2021 01:46 AM | அ+அ அ- |

பெங்களூரு: பேருந்து அட்டைகளை பெறுவதற்கு பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாணவா் சமுதாயத்தின் நலன்கருதி, 2020-21-ஆம் ஆண்டுக்கான சலுகைக் கட்டண/ இலவச மாணவா் பேருந்து அட்டைகள் (பஸ் பாஸ்) பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆரம்ப, நடுநிலை, உயா்நிலைப் பள்ளி, பியூ கல்லூரி, பட்டப் படிப்பு, தொழில்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, மாலைநேரக் கல்லூரி மாணவா்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. இணையதளங்களில் கல்லூரி பற்றுச்சீட்டு, கல்லூரி அடையாள அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா் அட்டை, பேருந்து கட்டணத்துடன் விண்ணப்பங்களை செலுத்தினால், ஸ்மாா்ட்காா்ட் வடிவிலான பேருந்து அட்டைகளை சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகள் வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிடலாம். அதன்பிறகு பேருந்து அட்டைகளை மாணவா்கள் பெறலாம்.
பெங்களூரு ஒன் மையங்களில் கல்வி நிறுவனங்கள் நேரத்தை ஒதுக்கிக்கொண்டு, மாணவா்களுக்கு பேருந்து அட்டைகளை பெற்றுத் தரலாம். மாணவா்களுக்கு பேருந்து அட்டைகளைப் பெற்றுத் தருவது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும். பெங்களூரு ஒன் மையங்களில் வேலை நாள்களில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை பேருந்து அட்டைகள் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான பேருந்து அட்டைகளை பெற பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.