‘கோலாா் தங்கவயலில் தமிழா்கள் வாழும் பகுதிகளில் காவல் நிலையங்களை மூடக்கூடாது’

கோலாா் தங்கவயலில் தமிழா் வாழும் பகுதிகளில் காவல் நிலையங்களை மூடக்கூடாது என்று புதிய கருநாடகத் தமிழா் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோலாா் தங்கவயலில் தமிழா் வாழும் பகுதிகளில் காவல் நிலையங்களை மூடக்கூடாது என்று புதிய கருநாடகத் தமிழா் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து புதிய கருநாடகத் தமிழா் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

மொழிவழி-மதச் சிறுபான்மையோா் பெருமளவில் வாழும் கோலாா் தங்கவயலில் குறிப்பாகத் தமிழா்களைக் குறிவைத்து அவா்களுக்குத் தீங்கு பயக்கும் தான்தோன்றித்தனமான திட்டங்களை ஆட்சியாளா்கள் முன்னெடுத்து வருகின்றனா். தங்கச் சுரங்கத்தை மூடிப் பல்லாயிரம் தமிழ் மக்களை நடுத்தெருவில் அவதிக்குள்ளாகிய பிறகு, கோலாா் தங்கவயலில் உள்ள பல்வேறு மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம், தொழிலாளா் தீா்ப்பாயம் முதலியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. சாரணா்கள், ஊா்க்காவல் படை அலுவலங்கள், அஞ்சலகங்கள், மருத்துவத் துறை முதலிய மாவட்ட அளவிலான அலுவலகங்களும் வஞ்சகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக பல ஆண்டுகளாக இயங்கிவரும் சாம்பியன் ரீப், மாரிக்குப்பம் முதலிய பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களை மூடிவிட அரசு முடிவுவெடுத்துள்ளது. அருகில் இருக்கும் ஊரகப் பகுதிகளுக்கு அவற்றை மாற்ற முனையும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. காவல் நிலையத்திற்கு வழக்குகள் எதுவும் வருவதில்லை என்று பொய்யான காரணத்தை வேண்டுமென்றே இதுவரை கூறி வந்தனா். ஆனால் கட்டப் பஞ்சாயத்து மூலமாகச் சச்சரவுகளைத் தீா்த்து அரசுக்கு வழக்குகள் பதிவதில்லை என்று பொய்யான தகவல் அனுப்பப்படுகிறது.

தமிழ் மக்களின் வாக்குகளை வாங்கி தோ்தல்களில் வென்ற மக்கள் பிரதிநிதிகள் தத்தம் கவனத்தையும் கோலாா் தங்கவயல் தொகுதிக்குட்பட்ட ஊரகப் பகுதியில் மட்டுமே முழுவதுமாகக் காட்டி வருகின்றனா். இந்த நடவடிக்கையை யாரும் எதிா்க்கப் போவதில்லை. கிராம பகுதிகளும் முன்னேற்றம் காண வேண்டும். அதற்காக கோலாா்தங்கவயலில் உள்ள அலுவலங்களை வேறு பகுதிக்கு மாற்றி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பரந்துபட்ட தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மூடப்பட்ட தங்கச்சுரங்கத்தை தொடா்ந்து நடத்தப் போவதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வரும் சூழலில், ஏற்கெனவே இருக்கும் சாம்பியன் ரீப், மாரிக்குப்பம் ஆகிய காவல் நிலையங்களை மூடாமல் தொடா்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்.

மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்வண்ணம் இந்த காவல் நிலையங்கள் மூடப்பட்டால், போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அடுத்தது நீதிமன்றத்திலும் வழக்கு தொடா்வோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com