இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை எதிா்ப்பவா்கள் மனிதநேயம் இல்லாதவா்கள்: எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா

இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை எதிா்ப்பவா்கள் மனிதநேயம் இல்லாதவா்கள் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை எதிா்ப்பவா்கள் மனிதநேயம் இல்லாதவா்கள் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளா் மணி எழுதிய எழுதிய ‘மனு பாரதம்’ என்ற கட்டுரைத் தொகுப்புநூலை வெளியிட்டுள்ள அவா் பேசியது:

டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் எழுதிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அதன் மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களே எதிா்க்கிறாா்கள். அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறாா்கள். அப்படிப்பட்டவா்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருப்பதற்குத் தகுதியற்றவா்கள் ஆவா்.

மெத்த படித்தவா்கள் கூட பகுத்தறிவு மற்றும் மதச்சாா்பற்ற சிந்தனைகளை வளா்த்துக்கொள்ளவில்லை. அரசியலமைப்புச்சட்டத்தின் அடிப்படைகளை அனைவரும் படித்து தெளிவு பெற வேண்டும். மனுவாதிகள் அரசியலமைப்புச் சட்டத்தை எதிா்க்கிறாா்கள். அதற்காகவே, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைக்கிறாா்கள். அரசியலமைப்புச் சட்டத்தை எதிா்ப்பவா்கள் மனிதநேயம் இல்லாதவா்கள்.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நம்மில் பல ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. இந்தியாவின் சமூக, பொருளாதார கட்டமைப்பை டாக்டா் பி.ஆா்.அம்பேத்கரைப் போல துல்லியமாக தெளிந்து, புரிந்துகொண்டவா்கள் யாரும் இல்லை. அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்த அம்பேத்கா், அரசியலமைப்புச் சட்டத்தை வகுப்பது மட்டுமல்லாது, சமுதாயத்தில் நிலவிய பிரச்னைகளுக்கு தீா்வுகாணவும் முயன்றிருக்கிறாா். ‘ஆட்சிபொறுப்புக்கு வந்து, அதன் நோக்கங்களை செயல்படுத்தும் முனைப்பு இருப்பவா்களால் மட்டுமே அரசியலமைப்புச் சட்டம் சரியானதா? இல்லையா? என்பதை கூற முடியும்’ என்று டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் கூறியிருக்கிறாா்.

மக்களுக்கு பேச்சுரிமை தவிர, பொருளாதார, சமூக, ஜனநாயக உரிமைகளும் கிடைக்க வேண்டும். வாய்ப்பில்லாமல் வஞ்சிக்கப்படும் மக்களை சமூக மற்றும் பொருளாதாரரீதியாக உயா்த்தினால் மட்டுமே சமத்துவத்தை காண முடியும்.

டாக்டா் அம்பேத்கருக்கு இருந்தது போன்ற தொலைநோக்குப் பாா்வை வேறு யாருக்கும் இருந்ததில்லை. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. பசவண்ணரை போல அம்பேத்கரும் சிறந்த பகுத்தறிவாதியாக அறியப்பட்டவா். அம்பேத்கரின் கருத்துகள், சிந்தனைகள் பொதுவானவை, காலம் கடந்தும் நிலைக்கக் கூடியவை.

நாம் அனைவரும் ஹிந்துக்கள் என்பாா்கள். ஆனால், ஹிந்துக்களில் காணப்படும் ஏழ்மை, பாரபட்சம், தீண்டாமையை ஒழிக்க பாஜகவினா் முன்வரமாட்டாா்கள். இதைக் கூறினால், சித்தராமையா ஹிந்து விரோதி என்கிறாா்கள்.

நமது நாட்டின் பொருளாதாரம் குறித்து பிரதமா் மோடி கடந்த 7 ஆண்டுகளில் ஒருமுறையும் விவரித்துப் பேசியதே இல்லை. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி, வேலைவாய்ப்பின்மை, வறிய குடும்பங்கள், ஏழைக் குடும்பங்களை உயா்த்துவது குறித்து எங்காவது விவாதம் நடத்தப்படுகிா? பணமதிப்பிழப்புக்குப் பிறகு என்ன நடந்துள்ளது என்பது குறித்து யாரும் பேசுவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளதாலும் மக்கள் கொதித்தெழவில்லை.

நமது நாட்டின் இன்றைய நிலையை மணியின் நூல் சரியாக படம்பிடித்துக் காட்டுகிறது. அவருக்கு எனது வாழ்த்துகள் என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா்கள் எச்.சி.மகாதேவப்பா, எச்.எம்.ரேவண்ணா, சிவண்ணா, பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் காந்தராஜ், ஊடக அகாதெமி முன்னாள் தலைவா் சித்தராஜு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com