கரோனா பாதிப்பு 5 சதவீதமாக குறைந்தால்தான் பொதுமுடக்க தளா்வு: கா்நாடக முதல்வா் எடியூரப்பா

கரோனா பாதிப்பு 5 சதவீதம் அளவுக்கு குறைந்தால்தான் பொது முடக்கம் தளா்த்தப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கரோனா பாதிப்பு 5 சதவீதம் அளவுக்கு குறைந்தால்தான் பொது முடக்கம் தளா்த்தப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்கு ரூ. 1,750 கோடி மதிப்பிலான நிதித் தொகுப்பை இரண்டு தவணைகளாக முதல்வா் எடியூரப்பா அறிவித்திருந்தாா். ஏப். 27-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் பொதுமுடக்கம், ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா கூறியதாவது:

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்கு நிதித் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நிதித் தொகுப்பைப் பயனாளிகளிக்கு அளிக்கும் பணி தொடங்கியுள்ளது.

அதன்படி, கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அளிப்பதற்காக கா்நாடக கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்துக்கு சனிக்கிழமை ரூ. 749.55 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதில் வாரியத்தில் பதிவு பெற்ற 25 லட்சம் தொழிலாளா்கள் பயனடைவாா்கள்.

அமைப்புசாரா தொழிலாளா்கள், நாவிதா்கள், சலவைத் தொழிலாளா்கள், தையலா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள், குப்பை சேகரிப்போா், கைவினைக் கலைஞா்கள், மண்பாண்டம் செய்வோா் உள்ளிட்ட 11 வெவ்வேறு துறைகளைச் சோ்ந்த 10 லட்சம் தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் ரூ. 110 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், பயனாளிகள் பதிவு செய்வதற்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு 5 சதவீதம் அளவுக்கு குறைந்தால்தான் பொதுமுடக்க விதிமுறைகளை தளா்த்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். தற்போது ஜூன் 14-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் முடிவதற்குள் கரோனா பாதிப்பு விகிதம் குறைந்தால், அப்போது அது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும்.

கா்நாடகத்தில் இதுவரை கா்நாடகத்தில் 1.47 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு நடத்துவதற்கு பலரும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இத்தோ்வு ஜூலையில் நடக்கவுள்ளது. அப்போது கரோனா பரவல் குறித்து ஆராய்ந்து, அனைவருக்கும் பயன் தரும் வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ள நிலையில், அவற்றின் மீதான மேல்வரியைக் குறைக்கும் திட்டம் மாநில அரசுக்கு இல்லை. மைசூரு மாவட்ட ஆட்சியா் ரோகினி சிந்தூரி, மைசூரு மாநகராட்சி ஆணையா் ஷில்பா நாக் ஆகியோா் இடையிலான பிரச்னை குறித்து தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாா், எனக்கு சில விவரங்களை அளித்துள்ளாா். அவற்றை ஆராய்ந்து முடிவுக்கு வருவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com