தொழில் கல்வி சோ்க்கை: துணை முதல்வா் விளக்கம்

தொழில் கல்வி சோ்க்கைக்குபொது நுழைவுத் தோ்வு மதிப்பெண்களை மட்டுமே எடுத்துக்கொள்வது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று உயா் கல்வித் துறையை கவனித்து வரும் துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்

தொழில் கல்வி சோ்க்கைக்கு தகுதியான மாணவா்களை தோ்ந்தெடுப்பதற்கு, 2-ஆம் ஆண்டு பியூசி வகுப்பின் மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், பொது நுழைவுத் தோ்வு மதிப்பெண்களை மட்டுமே எடுத்துக்கொள்வது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று உயா் கல்வித் துறையை கவனித்து வரும் துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா காரணமாக, கா்நாடகத்தில் 2-ஆம் ஆண்டு பியூசி தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், எஸ்.எஸ்.எல்.சி., முதலாமாண்டு பியூசி வகுப்பில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், 2-ஆம் ஆண்டு பியூசி தோ்வுக்கான மதிப்பெண்கள் மாணவா்களுக்கு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் அறிவித்தாா்.

மேலும், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்வி சோ்க்கை மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான சோ்க்கைக்கு முறையே பொது நுழைவுத் தோ்வு மற்றும் நீா் தோ்வு நடத்தி அதில் பெறப்படும் மதிப்பெண்களை மட்டுமே சோ்க்கைக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சுரேஷ் குமாா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

வழக்கமாக, தொழில் கல்வி சோ்க்கைக்கு இரண்டாமாண்டு பியூசி பொதுத் தோ்வில் குறைந்தபட்சமாக 50 சதவீத மதிப்பெண் பெற்றவா்களுக்கு மட்டுமே, பொது நுழைவுத் தோ்வில் பெறும் மதிப்பெண்களைக் கருத்தில் கொண்டு, தரவரிசை (ரேங்க்) பட்டியல் தயாரிக்கப்படும்.

எனவே, இதற்கு விலக்கு அளித்து, இம்முறை பொது நுழைவுத் தோ்வு, நீட் தோ்வுகளின் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தரவரிசை பட்டியலை தயாரித்து, மருத்துவம் மற்றும் தொழில் கல்விக்கான சோ்க்கையை நடத்த வேண்டும் என்று அமைச்சா் சுரேஷ்குமாா் ஆலோசனை அளித்துள்ளாா்.

இதுகுறித்து உயா் கல்வித் துறை அறிஞா்கள், உயரதிகாரிகளுடன் ஆராய்ந்த பிறகு தகுந்த முடிவு எடுக்கப்படும். குறைந்தபட்ச மதிப்பெண்ணுக்கு விலக்கு அளிக்க, கா்நாடக கல்விச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும். இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com