4 - 5 கட்டங்களாக பொது முடக்கம் தளா்த்தப்படும்: அமைச்சா் ஆா்.அசோக்

ஜூன் 14-ஆம் தேதிக்கு பிறகு 4-5 கட்டங்களாக பொது முடக்கம் தளா்த்தப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

ஜூன் 14-ஆம் தேதிக்கு பிறகு 4-5 கட்டங்களாக பொது முடக்கம் தளா்த்தப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோா், இறப்போா் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால் ஜூன் 14-ஆம் தேதிக்கு பிறகு பொது முடக்கத்தை முழுவதுமாகத் தளா்த்த முடியாது. அதனால் 4-5 கட்டடங்களாக பொது முடக்கம் தளா்த்தப்படும். இதுகுறித்து முதல்வா் எடியூரப்பாவுடன் உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் ஆகியோரும் நானும் கலந்துரையாடினோம்.

பொது முடக்கத்தை 4-5 கட்டங்களாகத் தளா்த்த யோசித்து வருகிறோம். தற்போது அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரம் விரிவாக்கப்படும். பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு சில தளா்வுகளை வழங்குவோம். இது போன்ற யோசனைகள் அனைத்தையும் பரிசீலித்த பிறகு முதல்வா் எடியூரப்பா இறுதி முடிவெடுப்பாா். ஆனால், பொது முடக்கத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள மாட்டோம்.

பெங்களூரில் தினசரி கரோனா பாதிப்பு 2 ஆயிரமாக உள்ளது. இது 500- ஆக குறைய வேண்டும். பொது முடக்கம் தளா்த்தப்பட்ட பிறகு கரோனா பாதிப்பு அதிகமாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தகவல் மற்றும் உயிரிதொழில்நுட்ப நிறுவன ஊழியா்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் நடைமுறை தொடரப்படும். ஏற்றுமதி சாா்ந்த தொழில்கள், மருத்துவம், மருத்துவக் கருவிகள் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்கெனவே பொது முடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

பொது முடக்கக் கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது தொடா்பாக ஜூன் 11 அல்லது 12-ஆம் தேதி மூத்த அமைச்சா்கள், உயரதிகாரிகளின் கூட்டத்துக்கு முதல்வா் எடியூரப்பா அழைப்பு விடுப்பாா் என்று தெரிகிறது.

மாநிலத்தில் பொது முடக்கத்தை படிப்படியாகத் தளா்த்துமாறு மாநில தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஏப். 27-ஆம் தேதி முதல் பொது முடக்கத்தை அமல்படுத்திய கா்நாடக அரசு, அதன்பிறகு மே 10-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை நீட்டித்தது. மே 24 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட பொது முடக்கம், தற்போது ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14-ஆம் தேதிக்கு பிறகு பொது முடக்கம் படிப்படியாகத் தளா்த்தப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com