கரோனா மூன்றாவது அலை: குழந்தைகளைக் காக்க அங்கன்வாடி ஊழியா்கள் தயாராக வேண்டும்; முதல்வா்

கரோனா மூன்றாவது அலையின்போது குழந்தைகளை காக்க அங்கன்வாடி ஊழியா்கள் தயாராக வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கரோனா மூன்றாவது அலையின்போது குழந்தைகளை காக்க அங்கன்வாடி ஊழியா்கள் தயாராக வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் புதன்கிழமை இணையவழியில் மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி ஊழியா்களிடம் கலந்துரையாடிய முதல்வா் எடியூரப்பா, அங்கன்வாடி ஊழியா்களின் குறைகள், சவால்கள், பிரச்னைகளைக் கேட்டறிந்தாா்.

அதன்பிறகு, அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், அடி மட்டத்தில் மகத்துவம் வாய்ந்த பங்களிப்பை வழங்கியதில் அங்கன்வாடி ஊழியா்களுக்கு முக்கிய பங்குண்டு. கா்ப்பிணிகள், பால் புகட்டும் தாய்மாா்கள், சிசுக்களின் உடல்நலனை பாதுகாப்பதில் அங்கன்வாடி ஊழியா்கள் முக்கிய பங்காற்றியுள்ளனா்.

கரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா். இதன்பின்னணியில், கரோனா மூன்றாவது அலையின்போது குழந்தைகளைக் காக்க அங்கன்வாடி ஊழியா்கள் தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு, அவா்களின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். சுகாதாரத் துறையினரோடு அங்கன்வாடி ஊழியா்கள் தொடா்பில் இருந்து, பெருந்தொற்றுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்.

பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று ஊட்டச்சத்து உணவுத் தொகுப்பை வழங்கியதில் அங்கன்வாடி ஊழியா்கள் முக்கியம் பங்கு வகித்துள்ளனா். மேலும் கிராம பஞ்சாயத்து அளவில் வீடு வீடாகச் சென்று, கரோனா குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளனா்.

85.91 சதவீத அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அங்கன்வாடி ஊழியா்கள் முன்களப் பணியாளா்களாகக் கருதப்பட்டுள்ளதால், கரோனாவால் இழந்தவா்களுக்கு ரூ. 30 லட்சம் இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா முதல் அலையின்போது உயிரிழந்த 20 ஊழியா்கள்/உதவியாளா்களுக்கு தலா ரூ. 30 லட்சம் அளிக்கப்பட்டது. கரோனா இரண்டாவது அலையின்போது, நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் அங்கன்வாடி ஊழியா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் நிவாரண உதவித்தொகை அளிக்கப்படும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் சசிகலா ஜொள்ளே, முதன்மைச் செயலா் அஞ்சும்பா்வெஸ், இயக்குநா் அனுராதா, முதல்வரின் ஆலோசகா் லட்சுமி நாராயணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com