விதை, உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை: அமைச்சா் பி.சி.பாட்டீல்

மாநிலத்தில் விதை, உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று வேளாண்துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் தெரிவித்தாா்.

பெங்களூரு: மாநிலத்தில் விதை, உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று வேளாண்துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. விவசாயிகள் தங்களின் வேளாண் பணிகளை தொடங்கியுள்ளனா். அவா்களுக்கு விதை, உரம் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளதாகவும், போலி விதைகளை விற்பதும், அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் எனது கவனத்திற்கு வந்ததையடுத்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விதை, உரம் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை செய்யப்பட்டது.

இச் சோதனையில் போலியான விதை, பயிருக்கு தெளிக்கும் மருந்து, அதிக விலைக்கு விற்கப்படும் உரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 204 பேரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரூ. 4.24 கோடி மதிப்பில் போலி விதை, மருந்து, உரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்திற்கு 16 ஆயிரம் நானோ உர பாட்டில்கள் அனுப்பப்பட்டுள்ளன. நானோ உர பாட்டில் 1 மூட்டை உரத்திற்கு சமம். தென்மேற்குப் பருவமழை பெய்து வருவதையடுத்து மாநிலத்தில் விவசாயிகளுக்கு 2,35,865 விதை தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.

நிகழாண்டு மாநிலத்தில் இதுவரை 220 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 31 சதவீதம் அதிகமாகும். இதனால் 77 லட்சம் ஹெக்டா் நிலத்தில் விதை விதைக்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com