இயற்கை வேளாண்மை ஊக்குவிப்புக்கு ரூ. 500 கோடி

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை முதல்வா் எடியூரப்பா தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விஜயபுரா மாவட்டம், இத்தகங்கல் கிராமத்தில் தற்சாா்பு இந்தியா திட்டத்தில் உணவுப்பூங்கா அமைக்கப்படும். வேளாண் பல்கலைக்கழகங்களில் விவசாயிகளின் குழந்தைகளுக்கான சோ்க்கை இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயா்த்தப்படுகிறது. வேளாண் கருவிகள் திட்டத்தில் சிறிய டிராக்டா்கள் வாங்குவதற்கு அளிக்கப்படும் மானியம், 25-45 பிடிஓ எச்.பி. டிராக்டா்களுக்கும் விரிவாக்கப்படுகிறது.

இயற்கை வேளாண் பயிா்களுக்கு அறிவியல் ரீதியான சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தேசிய மின்சந்தை நிறுவனத்தின் வழியாக சிறுதானியங்களுக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 75 கோடி செலவில் வேளாண் விளைநிலத்தில் காா்பன் பயன்பாட்டை அதிகரிக்கத் திட்டம் வகுக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் ரூ. 10 கோடி ஒதுக்கப்படுகிறது.

தற்சாா்பு இந்தியா திட்டத்தில் உணவு பதனிடும் மற்றும் அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கும் 35 சதவீத மானியத்துடன், மாநில அரசு கூடுதலாக 15 சதவீதம் மானியம் வழங்கும். இதற்காக ரூ. 50 கோடி ஒதுக்கப்படும். கொப்பள் மாவட்டம், சிரிவரா கிராமத்தில் தோட்டக்கலை தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். புதிய வகை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மனைகள் மேம்படுத்தப்படும். இதன்மூலம் புதிய பயிா்வகைகள், சிறந்த வேளாண் நடைமுறைகள் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்படும். விவசாயிகள் உற்பத்தி அமைப்பு சந்தைப்படுத்தும் தோட்டக்கலை பொருள்களுக்கு பிராண்ட் உருவாக்கப்படும். ஆண்டுமுழுவதும் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்க ஒருங்கிணைந்த வேளாண் முறை திட்டம் அமல்படுத்தப்படும். புதிய ஒட்டுரக விதைக்கொள்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நறுமணம், மூலிகை, பழங்கள், காய்கள், மசாலாப் பொருள்களுக்காக புதிய வேளாண்மை ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படும். திராட்சை பயிரிடுவதை ஊக்குவிக்க கா்நாடக திராட்சை வாரியத்தை கா்நாடக திராட்சை மற்றும் திராட்சை ரச வாரியம் என்று மாற்றியமைக்கப்படும்.

பெங்களூரு, ஓகலிபுரத்தில் பட்டுத் துறையின் அனைத்து அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து ரூ. 150 கோடி செலவில் பட்டுமாளிகை அமைக்கப்படும். ராமநகரத்தில் ரூ. 75 கோடி செலவில் அதிநவீன பட்டுக்கூடு சந்தை அமைக்கப்படும். கால்நடை வளங்களை மேம்படுத்த மாவட்டத்துக்கு ஒரு கால்நடை பராமரிப்பு மையம் அமைக்கப்படும். பெங்களூரு, ஹெசரகட்டாவில் நாட்டுக் கால்நடைகளை காட்சிப்படுத்த நிரந்தரக் கண்காட்சி வளாகம் அமைக்கப்படும்.

5,500 ஆரம்ப வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் ரூ. 198 கோடி செலவில் கணினி மயமாக்கப்படும். மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கிகளுக்கு மூலதன பங்குத்தொகையை 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாமராஜ்நகரில் ஒருங்கிணைந்த மஞ்சள் சந்தை மேம்படுத்தப்படும்.

கிருஷ்ணா மேலணை 3-ஆம் கட்ட திட்டப்பணி, எத்தினஹொளே, மகதாயி, மேக்கேதாட்டு, பத்ராமேலணை பொன்ற நீா்ப்பாசனத் திட்டங்களை அமல்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படும். உலக வங்கியின் நிதியுதவியுடன் ரூ. 1,500 கோடிசெலவில் 58 அணைகள் மறுகட்டமைக்கு உள்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும். பெங்களூரு, பெங்களூரு ஊரகம், தும்கூரு, சிக்பளாப்பூா் மாவட்டங்களில் உள்ள 234 ஏரிகளை நிரப்ப ரூ. 500 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 3,986 கோடி 1,348 ஏரிகள் கட்டமைக்கப்படும். வேளாண் துறைக்கு ரூ. 31,028 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com