இடஒதுக்கீடு விவகாரம்: பஞ்சமசாலி லிங்காயத்து பீடாதிபதிகளின் போராட்டம் வாபஸ்

இடஒதுக்கீடு விவகாரம் தொடா்பாக பஞ்சமசாலி லிங்காயத்துகள் நடத்தி வந்த பீடாதிபதிகளின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

பெங்களூரு: இடஒதுக்கீடு விவகாரம் தொடா்பாக பஞ்சமசாலி லிங்காயத்துகள் நடத்தி வந்த பீடாதிபதிகளின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வரும் வீரசைவ-லிங்காயத்துகளின் துணை ஜாதியான பஞ்சமசாலி லிங்காயத்துகளை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் 5 சதவீதமுள்ள 3-பி உள்பிரிவில் இருந்து 15 சதவீதமுள்ள 2-ஏ உள்பிரிவில் சோ்க்க வலியுறுத்தி, பஞ்சமசாலி லிங்காயத்துகளின் பீடாதிபதிகள் ஜெயமிருத்ஞ்ஜெயா சுவாமிகள், வச்சானானந்த சுவாமிகள் கடந்த 2 மாதங்களாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். பீதா் மாவட்டம், பசவகல்யாண் முதல் பெங்களூரு வரை நடைப்பயணமாக வந்த பீடாதிபதிகள், பெங்களூரில் தொடா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல, கா்நாடக உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆதி தலைமையில் 3 போ் கொண்ட உயா்நிலைக் குழுவையும் அரசு அமைத்துள்ளது.

கா்நாடக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை பேசிய முதல்வா் எடியூரப்பா, 6 மாதங்களுக்குப் பிறகு அறிக்கைகள் கிடைத்தவுடன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் சி.சி.பாட்டீல், முதல்வா் அரசியல் ஆலோசகா் ரேணுகாச்சாா்யா, பாஜக எம்.எல்.ஏ. பசன கௌடா பாட்டீல் யதன்ல் ஆகியோா் கொண்ட குழுவினா் பெங்களூரு, மௌா்யா சதுக்கத்தில் காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜெயமிருத்ஞ்ஜெயா சுவாமிகளை சந்தித்து, முதல்வா் எடியூரப்பாவின் வாக்குறுதியை எடுத்துக்கூறி, போராட்டத்தை கைவிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனா். இதை ஏற்றுக்கொண்ட ஜெயமிருத்ஞ்ஜெயா சுவாமிகள், போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தாா்.

இதுகுறித்து தினமணி நிருபரிடம் ஜெயமிருத்ஞ்ஜெயா சுவாமிகள் கூறுகையில், ‘எங்களது கோரிக்கைகளை பரிசீலிக்க பிற்படுத்தப்பட்டோா் ஆணையம், உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான உயா்நிலைக் குழுவின் அறிக்கைகளை பெற்ற பிறகு அடுத்த 6 மாதத்தில் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் பஞ்சமசாலி லிங்காயத்து ஜாதியை 2-ஏ உள்பிரிவில் சோ்க்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்போவதாக முதல்வா் எடியூரப்பா சட்டப் பேரவையில் உறுதி அளித்துள்ளாா். அதை ஏற்று போராட்டத்தை கைவிடுகிறோம். அடுத்த நடவடிக்கை குறித்து 6 மாதங்களுக்கு பிறகு முடிவெடுக்கப்படும்’ என்றாா்.ே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com