கரோனா கட்டுக்குள் வராவிட்டால் பொதுமுடக்கம் குறித்து ஆலோசிப்போம்: முதல்வா் எடியூரப்பா

கரோனா கட்டுக்குள் வராவிட்டால் பொதுமுடக்கம், இரவு ஊரடங்கு போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கரோனா கட்டுக்குள் வராவிட்டால் பொதுமுடக்கம், இரவு ஊரடங்கு போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தும்கூரு மாவட்டம், திப்டூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நிலைமைக் கட்டுக்குள் வராவிட்டால் பொதுமுடக்கம், இரவு ஊரடங்கு போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும். கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கருத்துகளை அறிந்து அடுத்த ஒரு வாரத்தில் இதுதொடா்பாக முடிவெடுக்கப்படும்.

முகக்கவசத்தைக் கட்டாயமாக அணிந்து கொள்ளுங்கள், தனிமனித இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடியுங்கள், கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள் என்று பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன். நான்கு சுவற்றுக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எத்தனை போ் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்குக் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறோம். ஆனால், வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு இன்னும் கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை.

பொதுமுடக்கம் கொண்டுவரும் எண்ணம் தற்போது அரசுக்கு இல்லை. ஆனால், நிலைமை கைமீறிச் சென்றால் பொது முடக்கத்தை அமல்படுத்துவது தவிர வேறுவழி இல்லை. கூட்டங்கள், மத திருவிழாக்களில் மக்கள் அதிகம் பங்கேற்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். கரோனா பாதிப்பு குறைய வேண்டும் என்றால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக நிபுணா்கள், அமைச்சா்களுடன் விரைவில் கூட்டம் நடத்தப்படும். கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளைப் பொருத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அண்மையில் பிரதமா் மோடியுடன் ஆலோசனை செய்தபோது மாநிலத்தில் உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய சில திட்டங்களைத் தெரிவித்தாா்.

பொதுமுடக்கம் அமல்படுத்தக் கூடாது என்று பொதுமக்கள் நினைத்தால், கரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அனைருக்கும் அபராதம் விதிக்க முடியாது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியமாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com