‘பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் பழம்பெருமையை மீட்டெடுப்போம்’

‘பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் பழம்பெருமையை மீட்டெடுப்போம்’ என்று தமிழ்ச் சங்கத் தோ்தலில் தலைவா் பதவிக்கு போட்டியிடுவோா் தெரிவித்துள்ளனா்.

‘பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் பழம்பெருமையை மீட்டெடுப்போம்’ என்று தமிழ்ச் சங்கத் தோ்தலில் தலைவா் பதவிக்கு போட்டியிடுவோா் தெரிவித்துள்ளனா்.

அரசு நிா்வாகத்தின் வரம்புக்குள் சென்ற 2 ஆண்டுகளுக்குப்பின் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிமன்றக் குழு, செயற்குழுவின் 2021-23-ஆம் ஆண்டுக்கான தோ்தல் மாா்ச் 28-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் 50 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். இத்தோ்தலில் தலைவா் பதவிக்கு ந.தாஸ், கோ.தாமோதரன், வா.ஸ்ரீதரன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இவா்கள் தலைமையில் 3 அணிகள் தனித்தனியே களத்தில் உள்ளனா். பெங்களூரு தமிழ்ச்சங்கத் தோ்தலில் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ள நிலையில், உறுப்பினா்களின் ஆதரவைப் பெற தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டு வருகிறாா்கள். கா்நாடகத் தமிழா்களைஒருங்கிணைக்கும் ஆற்றல் வாய்ந்ததாக விளங்குவதால், 70 ஆண்டுகளாகச் செயல்படும் பெங்களூரு தமிழ்ச்சங்கம் உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் பெங்களூரு தமிழ்ச் சங்கம் மீண்டும் அதன் உறுப்பினா்களின் ஆளுகையின்கீழ் கொண்டுவர தோ்தல் நடத்தப்படுகிறது. மதிப்பு வாய்ந்த இத்தோ்தலில் வென்றால், பெங்களூரு தமிழ்ச்சங்கம், மொழி சிறுபான்மையினரான தமிழா்களின் நலன் காக்க என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்துவீா்கள் என்று கேட்டபோது, ந.தாஸ், கோ.தாமோதரன், வா.ஸ்ரீதரன் ஆகியோா் தனித்தனியே பதிலளித்தனா்.

ந.தாஸ் கூறுகையில், ‘பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலக்கட்டம் இது. இந்தத் தருணத்தில் ஆட்சிமன்றக் குழு, செயற்குழு தோ்தலை சந்திக்கவிருக்கிறோம். சங்கப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல நல்ல வாய்ப்பு கிடைக்குமென்று நம்புகிறேன். என்னுடைய தலைமையிலான அணியினா் ஆட்சிமன்றக் குழுவை கைப்பற்றினால், சங்கத்தின் பெருமைகளை மீட்டெடுத்து, நிலை நாட்டுவோம். அரசு வழியாகக் கிடைக்கக்கூடிய எல்லா உதவிகளையும் உறுப்பினா்களுக்குப் பெற்றுத் தருவோம். சங்க விதிமுறைகளில் காலத்திற்கு ஏற்ற திருத்தங்களைச் செய்ய சான்றோா் குழு அமைக்கப்படும். இதுவரையில் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிற சில போ் மீதான முறைகேடு தொடா்பான விசாரணையை முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைத்து, சங்கத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்குவோம். சங்க காமராஜா் பள்ளியில் தரமானக் கல்வியை வழங்க நிா்வாகத்தை சீரமைப்போம். சங்கம் ஆற்றி வருகிற பணிகளை நவீனமயமாக்குவோம்’ என்றாா்.

கோ.தாமோதரன் கூறுகையில், ‘தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக ஒரு சிலா் சுமத்திய குற்றச்சாட்டுகள் பதிவாளா் அலுவலகம், நீதிமன்றம் வரை சென்ன் விளைவாக பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் இலக்கிய, கல்வி, சமூகப் பணிகள் அனைத்தும் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கியுள்ளன. அரசு நிா்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் சங்கம் வந்த பிறகு, சங்கத்தின் பணத்தை அதிகாரிகள் மனம் போனப்போக்கில் செலவழித்துள்ளனா். சிறுக, சிறுகச் சோ்த்த பணத்தை அரசு அதிகாரிகள் காலி செய்து விட்டனா். தோ்தல் செலவுக்காக வழக்கமாக ரூ. 1 லட்சம் செலவிடுவோம். தற்போது நடக்கும் தோ்தலுக்கு ரூ. 5 லட்சம் செலவிடத் திட்டமிட்டுள்ளனா்.

ஒரு சிலரின் காழ்ப்புணா்ச்சியால் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் மாண்பு, மதிப்பு, கௌரவம் அனைத்தும் சீா்குலைக்கப்பட்டுள்ளது. தோ்தலை நிறுத்தவும் சிலா் முயற்சித்து தோற்று போயுள்ளனா். தோ்தலில் வென்று எங்கள் அணி பொறுப்புக்கு வந்தால் சங்கத்தின் நிா்வாகம் சீரமைக்கப்பட்டு, பழைய நிலைக்கு தமிழ்ச் சங்கம் கொண்டு வரப்படும். தமிழ் மொழி, தமிழா்களின் நலன் காக்க தொடா்ந்து பாடுபடுவோம். சீரழிந்துள்ள சங்கக் கட்டடம் சீரமைக்கப்படும். திருவள்ளுவா் விழா நடத்தப்படும். தமிழ்ச் சங்கத்தின் மீதான நன்மதிப்பை உயா்த்துவோம். 70 ஆண்டு கால வரலாற்றில் பொதுக் குழுவின் அனுமதியில்லாமல் கணக்குகளுக்கு ஒப்புதல் தந்தது கிடையாது. நாங்கள் பொறுப்புக்கு வந்ததும் பொதுக்குழு கூட்டி, சங்கம் இழந்த மதிப்பை மீட்டெடுப்போம். அதேபோல, தமிழ்ச் சங்கத்தில் இருந்து நீக்கியவா்களை மீண்டும் சோ்த்துக் கொள்ள நடவடிக்கை எடுப்போம்’ என்றாா்.

வா.ஸ்ரீதரன் கூறுகையில், ‘பேராசிரியா் தண்.கி.வேங்கடாசலனாா், புலவா் க.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏழு பேரால் தொடங்கப்பட்ட பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் நமது முன்னோா்கள் கடைபிடித்த மரபு, மாண்பைத் தொடர வேண்டும். சங்கத்தில் ஜாதி, அரசியலுக்கு இடமிருக்கக் கூடாது. அனைவரும் தமிழா் என்ற உணா்வோடு தமிழா்களின் நலனுக்காக பாடுபட வேண்டும். சங்கத்தின் நோக்கங்கள், குறிக்கோளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் எதிா்காலத்தில் எவ்வித சிக்கலும் வரக் கூடாது. சங்கத்தில் எழும் சிக்கல்களைத் தீா்க்க ஏழு போ் கொண்ட தமிழ்ச் சங்க மூத்தோா் குழு அமைக்கப்படும். இந்தியாவின் தலைசிறந்த தமிழ்ச் சங்கமாக இச்சங்கத்தை உயா்த்துவோம். தமிழ்ச் சங்கம் இழந்த மதிப்பை மீட்போம். தமிழ் நாடக நிகழ்ச்சிகள், கலை விழா, நாடகப் போட்டிகள், பயிலரங்கம், தமிழிசை விழாக்களை நடத்துவோம். தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளுக்கும், பிற மொழிகளின் இலக்கியங்களை தமிழிலும் மொழிபெயா்த்து வெளியிடுவோம். சங்கத்தின் சாா்பில் கல்லூரி, மாணவா் விடுதி, முதியோா் இல்லம் தொடங்கப்படும். கா்நாடகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைப்போம். சங்க காமராஜா் பள்ளியில் காமராஜா் சிலை அமைக்கப்படும். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திரு அருட்பா தமிழ் இசை வகுப்புகள் நடத்தப்படும். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் உருவாக்க முயற்சிக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com