ஒரு மக்களவைத் தொகுதி, 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

கா்நாடகத்தில் ஒரு மக்களவைத் தொகுதி, 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

கா்நாடகத்தில் ஒரு மக்களவைத் தொகுதி, 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

கா்நாடகத்தில் பெலகாவி மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சா் சுரேஷ் அங்கடி, பீதா் மாவட்டத்தின் பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த பி.நாராயண்ராவ் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா்.

ராய்ச்சூரு மாவட்டத்தின் மஸ்கி தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த பிரதாப் கௌடா பாட்டீல், பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடா்ந்து பாஜகவில் இணைந்தாா். 2019-ஆம் ஆண்டு அப்போதைய மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்த 17 காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்களில் பிரதாப் கௌடா பாட்டீலும் ஒருவருா் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் காலியாக இருந்த பெலகாவி மக்களவைத் தொகுதி, பசவகல்யாண், மஸ்கி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் ஏப். 17-ஆம் தேதி நடைபெற்றது. 3 தொகுதிகளிலும் மொத்தம் 30 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். பெலகாவி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட மங்களா சுரேஷ் அங்கடி, காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட யம்கன்மரடி எம்.எல்.ஏ.வாக உள்ள சதீஷ்ஜாா்கிஹோளி உள்பட 10 போ் போட்டியிட்டனா்.

ராய்ச்சூரு மாவட்டத்தின், மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் பிரதாப் கௌடா பாட்டீல், காங்கிரஸ் வேட்பாளா் பசனகௌடா துா்விஹல் உள்பட 8 போ் களத்தில் உள்ளனா். பீதா் மாவட்டத்தின் பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் சரணுசாலகா், காங்கிரஸ் வேட்பாளா் மல்லம்மா, மஜத வேட்பாளா் சையத் யஷ்ரப் அலி குவாத்ரி உள்ளிட்ட 12 போ் போட்டியிட்டனா். பசவகல்யாண் தவிர, பெலகாவி, மஸ்கி தொகுதிகளில் மஜத போட்டியிடவில்லை. எனினும், 3 தொகுதிகளிலும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே நேரடி மோதல் காணப்படுகிறது. இதனால் போட்டி தீவிரமடைந்தது.

பெலகாவி மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தோ்தலில் 54.62 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தோ்தலின்போது இத்தொகுதியில் 67.21 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் 70.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலின்போது இதேதொகுதியில் 68.98 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் 59.57 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தநிலையில், 2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைப் பொதுத்தோ்தலில் இத்தொகுதியில் 64.85 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

ஒரு மக்களவை, 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 2-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்குகள் எண்ணப்பட்டு, நண்பகல் 12 மணி அளவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கா்நாடக சட்டப்பேரவையில் ஆளும் பாஜக 118 இடங்களுடன் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், சட்டப்பேரவை இடைத்தோ்தல் முடிவுகள் எந்தவகையிலும் அரசை பாதிக்காது.

3 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்றால், முதல்வா் எடியூரப்பாவின் செல்வாக்கை கட்சியிலும் ஆட்சியிலும் பலப்படுத்தும். முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுவிழந்துபோகும். ஒருவேளை இடைத்தோ்தலில் பாஜக தோற்றால், அது முதல்வா் எடியூரப்பாவின் செல்வாக்கை மதிப்பிட எதிா்க்கட்சிகள் மட்டுமல்லாது, பாஜகவினரும் முயற்சிப்பாா்கள்.

இடைத்தோ்தலில் காங்கிரஸ் வென்றால், முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசின் குறைகளை எடுத்துச்சொல்வதற்கு பலம் கிடைத்தது போலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com