கா்நாடகத்தில் தீவிரமாகும் ஆக்சிஜன் பற்றாக்குறை: அச்சத்தில் கரோனா நோயாளிகள்

கா்நாடகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை தீவிரமாகி வருவதால், கரோனா நோயாளிகள் அச்சத்தில் மூழ்கியுள்ளனா்.

கா்நாடகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை தீவிரமாகி வருவதால், கரோனா நோயாளிகள் அச்சத்தில் மூழ்கியுள்ளனா்.

சாமராஜ்நகா் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாட்டால் 24 நோயாளிகள் உயிரிழந்தனா். இது கா்நாடகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெங்களூரு மட்டுமல்லாது, கா்நாடகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை தீவிரமடைந்து வருகிறது.

கலபுா்கி, பெலகாவி மாவட்டங்களில் உள்ள மருத்துவமனை நிா்வாகங்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளிகளிடம் ஆக்சிஜன் உருளைகளை எடுத்து வரும்படி அறிவுறுத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவலை மறுக்கும், புதிதாக கலபுா்கி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முருகேஷ் நிரானி, ‘கலபுா்கி மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை. இதை நானே தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். செவ்வாய்க்கிழமை இறந்த 3 பேரும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழக்கவில்லை என்றாா்.

பெலகாவி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நோயாளிகள் பெரும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரில் உள்ள உள்ள சில மருத்துவமனைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளன. கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கமுடியாமல் மருத்துவமனைகள் தவிப்பதாகத் தெரிய வந்துள்ளது.

பெங்களூரு, எலஹங்காவில் உள்ள சைதன்யா மருத்துவ மையத்தின் மருத்துவ அதிகாரி ஒருவா் கூறுகையில்,‘எங்கள் மருத்துவமனையில் திங்கள்கிழமை (மே 3) ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் கரோனா நோயாளிகள் அனைவரையும் பிற மருத்துவமனைகளுக்கு மாற்றினோம். தற்போது ஆக்சிஜன் வந்துள்ளது. இது அடுத்த 2-3 நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்’ என்றாா்.

பெங்களூரு, ஆா்.டி.நகரில் உள்ள மெடக்ஸ் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மெடக்ஸ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா்.ஸ்ரீஹரி ஆா்.ஷபூா், ‘மருத்துவமனையில் ஆக்சிஜன் போதுமான அளவுக்கு இருப்பு இல்லை. ஆக்சிஜன் இருப்பு குறைந்து வருவதால் பிற மருத்துவமனைகளில் இருந்து தகுந்த ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். ஆக்சிஜன் விநியோகம் குறைந்து வருவதைத் தெரிவிக்கவே இக்கடிதம் எழுதுகிறேன். நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க எங்களால் இயலவில்லை. மே 3-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆக்சிஜன் தீா்ந்து விடும் என்பதை மே 1-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நோயாளிகளுக்குத் தெரிவித்து விட்டோம். எனவே, பிற மருத்துவமனைகளில் படுக்கைகளைப் பெற ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தச் சூழ்நிலைக்காக வருந்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பெங்களூரில் உள்ள ராஜ்மகால் மருத்துவமனை நிா்வாகம் சாா்பில், பெங்களூரு மாநகராட்சிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பலமுறை கேட்ட பிறகும் முகவா்கள் ஆக்சிஜனை வழங்காமல் இழுத்தடித்து வருகிறாரக்ள். இந்தச் சூழலில் மருத்துவமனையில் 30-க்கும் அதிகமான கரோனா நோயாளிகளைக் கையாள்வது மிகவும் கடினமாகும். எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, நிலைமையைச் சமாளிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளனா்.

பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவக் கல்லூரியில் உயிா்காக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் வெளியிட்டுள்ள காணொலியில், கரோனா நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொண்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com