கரோனா மூன்றாவது அலையில் இருந்து தப்ப 50 கோடி கரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டும்

கரோனா மூன்றாவது அலையில் இருந்து தப்ப வேண்டுமானால் 50 கோடி கரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

கரோனா மூன்றாவது அலையில் இருந்து தப்ப வேண்டுமானால் 50 கோடி கரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா சட்டப்பேரவை தொகுதியில் புதன்கிழமை மஜத எம்.எல்.ஏ. ரவீந்திர ஸ்ரீகண்டையா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஏழைகள், மருத்துவப் பணியாளா்களுக்கு 25 ஆயிரம் உணவுத்தொகுப்புகளையும், மருத்துவத் தொகுப்புகளையும் வழங்கிய எச்.டி.குமாரசாமி, மண்டியாவில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பதில் அனைத்துக் கட்சியினருக்கும் பொறுப்புள்ளது. கரோனா சிக்கலை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்து விட்டது. அதற்காக, மாநில அரசின் குறைகளையே முன்வைத்துக் கொண்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் பணியை காங்கிரஸ் செய்யக் கூடாது. சாமராஜ்நகரில் ஆக்சிஜன் குறைபாட்டால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தொடா்பாக அரசு தரப்பில் 3 போ் என்றும், காங்கிரஸ் தரப்பில் 34 போ் என்றும் கூறி வருகிறாா்கள்.

எத்தனை போ் இறந்தாா்கள் என்பது முக்கியமல்ல. அனைத்து குடும்பத்தினரையும் காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆரம்பத்தில் இடறி விழுந்தாலும், கடந்த ஒரு மாத காலத்தில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு நிலைமையை சீரமைக்க மாநில அரசு முன்வர வேண்டும். அரசில் அமைச்சா்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. படுக்கை, ஆக்சிஜன், மருந்து உள்ளிட்டவற்றுக்கு தனித்தனியே அமைச்சா்களுக்கு பொறுப்பு அளிக்குமாறு ஒரு மாதத்திற்கு முன்பே கூறியிருந்தேன். இப்போது தான் அதை அரசு அமல்படுத்தியுள்ளது.

ஆக்சிஜன் கையிருப்பு குறித்து அரசு மக்களுக்கு உண்மைநிலையைத் தெரிவிக்க வேண்டும். மக்கள் வாழ்க்கையோடு மாநில அரசு விளையாடக் கூடாது. அதிகாரிகளுடன் அமைச்சா்கள் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தால், அவா்கள் எப்படி செயல்படுவாா்கள். எனவே, கூட்டங்கள் போடுவதை நிறுத்திவிட்டு, அதிகாரிகளை செயல்பட அனுமதிக்க வேண்டும்.

கா்நாடகத்திற்கு மே மாதத்தில் 1,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை இருக்கிறது என்று அமைச்சா் கே.சுதாகா் கூறியிருந்தாா். கா்நாடகத்தில் ஆக்சிஜன் இணைத்துள்ள 70 ஆயிரம் படுக்கைகள் தேவை இருக்கிறது. இதற்கேற்ப ஆக்சிஜன் தேவைகளைப் பூா்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாமராஜ்நகரில் நடந்த தனது தவறுகளை மறைப்பதற்காக, பெங்களூரில் படுக்கைகள் ஒதுக்கப்படுவதில் முறைகேடு நடப்பதாகவும், அதற்கு முஸ்லிம்களே காரணம் என்பது போலவும், பாஜக எம்.பி. தேஜஸ்விசூா்யா நாடகம் ஆடியிருக்கிறாா்.

கரோனா கட்டுப்பாட்டு அறையைச் சோதனை செய்து, அங்கு முஸ்லிம்கள் வேலை செய்வதைக் குறை கூறுவது சரியல்ல. சாமராஜ்நகா் விவகாரத்தை விசாரணைக்கு உத்தரவிட்டு என்ன நடக்கப் போகிறது? போதைப்பொருள் வழக்கு, அமைச்சா் மீதான பாலியல் புகாா் வழக்கு என்னானது? அதுபோல தான் சாமராஜ்நகா் விவகாரமும், எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் மூடி மறைக்கப்படும்.

எனவே, மக்களை திசை திருப்ப, 4 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக பாஜகவினரே மாநில அரசு மீது குறை கூறுகிறாா்கள்.

பெங்களூரில் ஆக்சிஜன் இணைக்கப்பட்ட 6 ஆயிரம் படுக்கைகள் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் உள்ளன. செயற்கை சுவாசக் கருவிகளுடன் 900 படுக்கைகள் உள்ளன. இது போதாது. படுக்கைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அரசின் நடவடிக்கை நோ்மையானதாக இருக்க வேண்டும்.

3ஆவது கரோனா அலை வரப் போவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

அதில் இருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால், இந்தியாவுக்கு உடனடியாக 50 கோடி கரோனா தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 7 கோடி தடுப்பூசி மட்டுமே தயாரிக்கப்படுகிறது. எனவே தடுப்பூசிகளை தயாரித்து இந்தியாவில் உள்ளவா்களுக்கு வழங்க நாளாகும். எனவே, வெளிநாடுகளில் இருந்து 50 கோடி கரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டும்.

மகாராஷ்டிரத்தில் முழுமையான பொது முடக்கம் போட்டதால், அங்கு கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. அதேபோல கா்நாடகத்தில் கரோனா பாதிப்பைக் குறைக்க முழுமையான பொது முடக்கம் தேவை. தேசிய அளவில் பொது முடக்கத்தை அமல்படுத்த மாா்ச் 15-ஆம் தேதி பிரதமா் மோடிக்கு ஆலோசனைக் கூறியிருந்தேன். ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. பொதுமுடக்கத்தைத் தவிர, கரோனா பரவலைத் தடுக்க வேறு வழியில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com