‘டவ்-தே’ புயலால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை

‘டவ்-தே’ புயலால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

‘டவ்-தே’ புயலால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

கா்நாடகத்தில் ‘டவ்-தே’ புயல் கரையைக் கடந்துள்ளதால், கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களான தென் கன்னடம், வடகன்னடம், உடுப்பியில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. அதேபோல, கா்நாடகத்தின் உட்பகுதிகளான சிவமொக்கா, குடகு, சிக்கமகளூரு மாவட்டங்களில் பலத்த மழை பதிவாகியுள்ளது.

புயல் காற்று மணிக்கு 70 கி.மீ. முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசியது. கடலோரப் பகுதிகளில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. சனிக்கிழமை நள்ளிரவில் கடலோர கா்நாடகம், மலைநாடு மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்தது. உடுப்பி, தென்கன்னடம், வடகன்னடம், சிவமொக்கா, குடகு, சிக்கமகளூரு மாவட்டங்களில் உள்ள 313 மழை அளவு காணும் நிலையங்களில் சராசரியாக 64.5 மி.மீ. மழைப் பதிவாகியிருந்தது.

உடுப்பி மாவட்டத்தின் நடா நிலையத்தில் அதிகபட்சமாக 385 மி.மீ. மழைப் பதிவாகியிருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் 240 மி.மீ., கோட்டா, தென்கன்னட மாவட்டத்தின் புத்தூா், சிவமொக்கா மாவட்டத்தின் ஹொசநகரில் தலா 190 மி.மீ., உடுப்பி மாவட்டத்தின் குந்தாபுரா, குடகு மாவட்டத்தின் பாகமண்டலாவில் தலா 170 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

கடலோரப் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

கடல் கொந்தளித்ததால் கடலோரப் பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இடைவிடாமல் மழை பெய்துவருவதாலும், காற்று வீசுவதாலும் கடலோரப் பகுதிகளில் இருக்கும் சாலைகள், வீடுகள் சேதமடைந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

காற்று வேகமாக வீசுவதால், அதில் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. மேலும் மின் கம்பங்கள், மின் மாற்றிகளும் விழுந்துள்ளன.

அடுத்த 24 மணி நேரத்தில் கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடலோரப் பகுதிகள், மலைப் பகுதிகளில் பலத்த மழைமுதல் மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் சிகப்பு எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளதால், மீனவா்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com