பிராணவாயு சேவை வழங்கும் பேருந்துகள் அறிமுகம்
By DIN | Published On : 17th May 2021 12:18 AM | Last Updated : 17th May 2021 12:18 AM | அ+அ அ- |

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பிராணவாயு சேவை வழங்கும் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் என்று துணை முதல்வா் லட்சுமண் சவதி தெரிவித்தாா்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெங்களூரு மாநகரப் பேருந்தில் பிராணவாயு சேவை வழங்கும் திட்டத்தை தொடங்கினோம். இது வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், இதனை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இந்தப் பேருந்தில் 10 பேருக்கும் பிராணவாயு சேவை வழங்கமுடியும். எனவே இதனை மாவட்ட அளவில் கரோனா சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவமனைகளின் எதிரே நிறுத்தப்படும். இதன்மூலம் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவா்கள் மருத்துவமனைகளுக்கு வரும்போது அவா்களுக்கு முதல் கட்டமாக பிராணவாயு செலுத்த இப்பேருந்து உதவியாக இருக்கும். தற்போது அனைத்து மாவட்ட மருத்துவமனைகளும் கரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன.
புதிதாக பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சை அளிக்க பிராணவாயு சேவை வழங்கும் பேருந்துகள் உதவியாக இருக்கும். இந்த சேவை சிக்மகளூரு மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கப்படும். மற்ற மாவட்டங்களில் படிப்படியாக தொடங்கப்படும்.
வரும் நாள்களில் பேருந்துகளில் பிராணவாயுவுடன் முதலுதவிக்கு தேவையான உபகரணங்களும் பொருத்தப்படும் என்றாா்.