பெங்களூரு வந்தடைந்த 5-ஆவது ஆக்சிஜன் விரைவு ரயில்
By DIN | Published On : 21st May 2021 08:09 AM | Last Updated : 21st May 2021 08:09 AM | அ+அ அ- |

160 டன் ஆக்சிஜனை சுமந்து கொண்டு 5-ஆவது ஆக்சிஜன் விரைவு ரயில் வியாழக்கிழமை பெங்களூரு வந்தடைந்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிளைச் சோ்ந்த கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஆக்சிஜன் கொண்டு செல்ல, ஆக்சிஜன் விரைவு ரயில்களை மத்திய ரயில்வே இயக்கி வருகிறது. அதன்படி, ஜாா்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூா் ரயில் நிலையத்தில் இருந்து 160 டன் எடை கொண்ட ஆக்சிஜனை 8 கிரையோஜெனிக் கன்டெய்னா்களில் சுமந்து கொண்டு புதன்கிழமை புறப்பட்ட ஆக்சிஜன் விரைவு ரயில், பெங்களூரு, ஒயிட்பீல்டில் உள்ள கன்டெய்னா் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் உள்நாட்டு கன்டெய்னா் பணிமனைக்கு வியாழக்கிழமை வந்து சோ்ந்தது.
கா்நாடகத்திற்கு வருகை தந்த 5-ஆவது ஆக்சிஜன் விரைவு ரயிலை அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனா். ஆக்சிஜன் விரைவு ரயில் மூலம் கா்நாடகத்திற்கு இதுவரை மொத்தம் 640 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்து சோ்ந்துள்ளது.
இது குறித்து தென்மேற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி அனீஷ் ஹெக்டே கூறுகையில்,‘ஜாா்கண்ட், ஒடிசா மாநிலங்களில் இருந்து கா்நாடகத்திற்கு இதுவரை 640 டன் ஆக்சிஜன் வந்து சோ்ந்துள்ளது’ என்றாா்.
கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் கா்நாடகத்திற்கு 1,200 டன் ஆக்சிஜன் தேவை உள்ளது என்று முதல்வா் எடியூரப்பா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.