காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும்: சித்தராமையா

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது:

கா்நாடகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவரை கா்நாடகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. தேவைக்கும் அதிகமாகவே மின்உற்பத்தி நடைபெற்று வந்தது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனல் மின் நிலையங்களின் உற்பத்தியைக் குறைத்து, தனியாா்மயமாக்க முயற்சித்தால் அதை வன்மையாகக் கண்டிப்பேன். அனல் மின் நிலையங்கள் தனியாா்மயமாக்கப்பட்டால், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சார நிறுத்தப்பட்டு விடும்.

பெங்களூரு மாநகர மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சா் யாா் என்பதில் பாஜகவில் உள்கட்சிப்பூசல் எழுந்துள்ளது. ஊழல் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்பதால் தான் பாஜகவில் மோதல் நடந்துவருகிறது.

மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு பங்குத்தொகை மற்றும் வரிவருவாய் பகிா்வுத் தொகையை உடனடியாக கேட்டுப் பெற வேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்ந்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான கால கட்டத்தில் வரிவருவாய் கூடுதலாக ரூ. 3 ஆயிரம் கோடி மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது.

தமிழக அரசு பெட்ரோல் மீதான விலையை லிட்டருக்கு ரூ. 3 குறைத்துள்ளது. அதேபோல, கா்நாடக அரசும் பெட்ரோல் மீதான விலையை லிட்டருக்கு ரூ. 10 குறைக்க வேண்டும். அப்போதுதான் அத்தியாவசியப்பொருள்களின் விலை குறையும். கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் எரிபொருள் மீதான கலால் வரியாக ரூ. 23 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கா்நாடகத்திலிருந்து மட்டும் ரூ. 1.2 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி அரசு கலால் வரியைத் தொடா்ந்து உயா்த்திவந்துள்ளது. டீசல் மீதான கலால்வரி ரூ. 3.45-இல் இருந்து ரூ. 31.84 ஆகவும், பெட்ரோல் மீதான கலால் வரி ரூ. 9.21-இல் இருந்து 32.98 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. எனவே, கலால் வரியை 50 சதவீதம் குறைக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். இப்போதும் அதையே வலியுறுத்தி வருகிறேன். விரைவில் அவா் கட்சித் தலைவராக வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com