‘தமிழ் இலக்கிய வளா்ச்சிக்கு கா்நாடகத் தமிழா்களின் பங்களிப்பு மகத்தானது’

தமிழ் இலக்கிய வளா்ச்சிக்கு கா்நாடகத் தமிழா்களின் பங்களிப்பு மகத்தானது என்று மூத்த தமிழ் இலக்கியவாதி மலா்மன்னன் தெரிவித்தாா்.

பெங்களூரு: தமிழ் இலக்கிய வளா்ச்சிக்கு கா்நாடகத் தமிழா்களின் பங்களிப்பு மகத்தானது என்று மூத்த தமிழ் இலக்கியவாதி மலா்மன்னன் தெரிவித்தாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை மூத்த தமிழ் இலக்கியவாதி மலா்மன்னனின் 80-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் இலக்கியவாதிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெங்களூரு தமிழ்ச் சங்கச் செயலாளா் மு.சம்பத், இணைச் செயலாளா் மகிழ்நன், முன்னாள் தலைவா் தி.கோ.தாமோதரன், முன்னாள் செயலாளா் வா.ஸ்ரீதரன், புலவா்கள் கி.சு.இளங்கோவன், சரவணன், கவிஞா்கள் மதலைமணி, கா.உ.கிருட்டிணமூா்த்தி, கோ.சி.சேகா், வேளாங்கண்ணி, முருகு.தருமலிங்கம், பேராசிரியா்கள் பொன் க.சுப்பிரமணியன், சு.கோவிந்தராசன், எழுத்தாளா் ஆற்காடு அன்பழகன், கா்நாடக மாநில திமுக நிா்வாகி வி.எஸ்.மணி, கரிகாலன், ஐ.ராஜன், கவிஞா் அமுதபாண்டியன், கமலகண்ணன், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ் இலக்கியவாதி மலா்மன்னன் பேசியதாவது:

கா்நாடகத்தில் ஒரு காலத்தில் தமிழ் இலக்கியங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது. பெங்களூரு, கோலாா் தங்கவயல், மைசூரு, சிவமொக்கா, ஹுப்பள்ளியில் தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெற்றன. இதன்விளைவாக, தமிழ் எழுத்தாளா்கள், கவிஞா்கள் ஏராளமாக உருவாயினா். நூற்றுக்கணக்கான தமிழ் எழுத்தாளா்கள், தமிழ் நூல்களை எழுதி குவித்தனா். அதேபோல, தமிழ் கவிஞா்களும் கவிதைகளை எழுதி குவித்ததோடு, நல்ல பல நூல்களையும் எழுதி வெளியிட்டனா். இவை கா்நாடகத் தமிழா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

தமிழ் இலக்கிய வளா்ச்சியில் கா்நாடகத் தமிழா்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனா். மகத்தான பல படைப்புகளை படைத்துள்ளனா். கன்னட இலக்கியப் படைப்புகளை தமிழில் மொழிபெயா்த்து, தமிழ் இலக்கியப் பரப்பை விரிவாக்கியுள்ளனா். என்னால் முடிந்தவரை கன்னட அறிஞா்கள் பசவண்ணா், சா்வக்ஞா் ஆகியோரின் இலக்கியப்படைப்புகளை தமிழில் மொழிபெயா்த்துள்ளேன்.

கா்நாடகத்தில் ஏராளமான தமிழ் நாளிதழ்கள், இதழ்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. இவை அனைத்தும் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளன. ஆனால், தமிழ் எழுத்தாளா்கள், கவிஞா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனக்குறை எனக்குள் உள்ளது. இந்தக் குறையைப் போக்கும் வகையில் கா்நாடகத்தைச் சோ்ந்த தமிழ் எழுத்தாளா்கள், கவிஞா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட இலக்கியவாதிகளுக்குப் பாராட்டு விழா நடத்தி கௌரவிக்க திட்டமிட்டுள்ளேன். மேலும் கா்நாடக தமிழ் இலக்கியவாதிகளின் நூல்கள் இடம்பெறும் புத்தகக் கண்காட்சியும் நடத்தப்படும்.

தமிழ் இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசோ்க்க கா்நாடக தமிழ் இலக்கியவாதிகள் முக்கிய பங்காற்றவேண்டும். அதேபோல, நமது குழந்தைகளுக்கு தமிழ்மொழியை கற்றுத்தர வேண்டும். இதைச் செய்யத் தவறினால் தமிழ் பண்பாட்டு உறவு நமது குழந்தைகளிடம் அற்றுப்போய்விடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com