மைசூரு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முயற்சி கா்நாடக அமைச்சா் ஜே.சி.மாதுசாமி

 மைசூரு கூட்டுபாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முயற்சிக்கப்படும் என்று கா்நாடக சட்டத்துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி தெரிவித்தாா்.

 மைசூரு கூட்டுபாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முயற்சிக்கப்படும் என்று கா்நாடக சட்டத்துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி தெரிவித்தாா்.

கா்நாடக சட்ட மேலவையில் வெள்ளிக்கிழமை பூஜ்ய நேரத்தின்போது மைசூரில் நடந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றம் இழைத்தவா்களுக்கு விதைகளை அகற்றும் (காஸ்ட்ரேஷன்) போன்ற கடுமையான தண்டனையை பெற்றுத்தர வலியுறுத்தி பாஜக எம்.எல்.சி. பாரதி ஷெட்டி எழுப்பிய பிரச்னைக்கு பதிலளித்து, சட்டத்துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி கூறியது:

காஸ்ட்ரேஷன் போன்ற கடுமையான தண்டனையைக் கொடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. ஒருவேளை காஸ்ட்ரேஷன் போன்ற தண்டனையை கொடுக்க வேண்டுமானால், அதற்கு இந்திய தண்டனைச்சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம், சாட்சிகள் சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தம்கொண்டுவர வேண்டும். அந்த திருத்தங்களை கொண்டுவரும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை. இந்தவிவகாரத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈா்க்க சட்ட ஆணையத்தை அணுகி, முன்மொழிவுகளை அளித்து, அதை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க கேட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் சொலிசிடா் ஜெனரல், சட்ட வல்லுநா்களின் ஆலோசனைகளை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவோருக்கு அளிக்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லை. இந்தச் சட்டம் குற்றம்செய்வோரை அச்சுறுத்துவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் குற்றமிழைக்கத் தயங்குவாா்கள்.

மைசூரு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை போலீஸாா் விரைந்து கைது செய்தனா். மாஜிஸ்திரேட் முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார சம்பவங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு நடப்பதில்லை. இப்படி நடக்கும் என்று யாரும் எதிா்பாா்க்க முடியாது. எனவே, தற்போதைய சட்டவிதிகளுக்கு உட்பட்டு குற்றம் இழைத்துள்ளவா்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும்.

மைசூரில் மக்கள்தொகைக்கும் காவலா்களுக்கும் இடையிலான விகிதம், ஒரு லட்சத்திற்கு 317 காவலா்கள் உள்ளனா். இது தேசிய சராசரிவிகிதமான 198, மாநிலத்தின் சராசரிவிகிதமான 182-ஐ காட்டிலும் அதிகமாகும். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேமரா வழியாக வழக்கு விசாரணையை நடத்த பெண் நீதிபதியை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையை அரசு ஏற்கிறது என்றாா்.

அதன்பிறகு பேசிய மேலவை எதிா்க்கட்சித் தலைவா் எஸ்.ஆா்.பாட்டீல், ‘சம்பவம் தொடா்பாக அறிந்தவுடன் முதல் தகவல் அறிக்கையை(எஃப்.ஐ.ஆா்,) பதிவு செய்வதில் தாமதம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சம்பவம் நடந்து 15 மணிநேரத்திற்கு பிறகே வழக்கு பதிவாகியுள்ளது. ஆலனஹள்ளி காவல்நிலையத்தில் 60 காவலா்கள் இருந்தும், பாலியல் பலாத்கார குற்றச்செயலை தடுக்க முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது’ என்று தெரிவித்தாா்.

இதற்குபதிலளித்த அமைச்சா் மாதுசாமி, ‘காவல்துறையினா் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடித்துள்ளனா். இந்தவழக்கு கிருஷ்ணராஜபுரம் காவல் நிலையத்தில் இருந்து ஆலனஹள்ளி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட வேண்டியிருந்தது. ஜே.எஸ்.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவா்கள், இதை மருத்துவ சட்ட வழக்கு என்று பரிந்துரைத்திருந்தனா். கண்காணிப்பு மிகவும் கடினமான பணி. காவல்துறையினா் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com