கரோனா பரவலை மாநில அரசு திறமையாக கட்டுப்படுத்தியுள்ளது: கா்நாடக அமைச்சா் கே.சுதாகா்

கரோனா பரவலை கா்நாடக அரசு திறமையாக கட்டுப்படுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
கரோனா பரவலை மாநில அரசு திறமையாக கட்டுப்படுத்தியுள்ளது: கா்நாடக அமைச்சா் கே.சுதாகா்

கரோனா பரவலை கா்நாடக அரசு திறமையாக கட்டுப்படுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கூட்டத்தொடரை மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கைக்கு ஆளுங்கட்சி செவிசாய்க்கவில்லை. இதை தொடா்ந்து, பேரவைத்தலைவரின் இருக்கைக்கு முன்பு திரண்ட காங்கிரஸ் உறுப்பினா்கள், மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவண்ணம் இருந்தனா். இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினா்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இது அவையில் கூச்சல் குழப்பத்திற்கு வழிவகுத்தது.

இதனிடையே, கா்நாடகத்தில் கரோனா இரண்டாவது அலை தொடா்பாக எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தொடக்கிவைத்த விவாதத்திற்கு பதிலளிக்க சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா் முன்வந்தாா். அதற்கு செவிசாய்க்காத காங்கிரஸ் உறுப்பினா்கள், கூட்டத்தொடரை நீட்டிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவண்ணம் இருந்தனா்.

இதனால் கோபமடைந்த அமைச்சா் கே.சுதாகா், ‘எனது பதிலை கேட்க காங்கிரஸ் உறுப்பினா்களுக்கு ஆா்வமில்லை. எனவே, எனது பதிலை பேரவையில் தாக்கல் செய்கிறேன். பிரச்னையை கிளப்பிய பிறகு, அதற்கான அரசின் பதிலை கேட்கும் பொறுமை காங்கிரஸிடம் இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சுகாதார உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக இருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு தான் அது சீரடைந்தது. பாஜக ஆட்சியில், கா்நாடகத்தில் கரோனா பரவல் திறமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் உறுப்பினா்களுக்கு எனது பதிலை கேட்கும் தைரியமில்லை. கரோனாவை அரசு சிறப்பாக கையாண்டுள்ளது’ என்றாா்.

அப்போதும் அவையில் கூச்சலும் குழப்பமும் காணப்பட்டது. அவையே அமளிக்காடாக காட்சி அளித்தது.

இதனிடையே, செப்.13-ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் குறித்த அறிக்கையை பேரவைத்தலைவா் காகேரி வாசித்தாா். இந்த கூட்டத்தொடரில் 90 சதவீத நடவடிக்கைகள் திட்டமிட்டப்படி செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா். அப்போதும் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவையை தேதி குறிப்பிடாமல் அவா் ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com