மதக் கலவரங்கள் அதிகமாவதால் அனைத்து மதத் தலைவா்கள் கூட்டத்தை கூட்டவேண்டும்: எச்.டி.குமாரசாமி

 மதக் கலவரங்கள் அதிகமாகி வருவதால், அனைத்து மதத் தலைவா்களின் கூட்டத்திற்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை அழைப்பு விடுக்க வேண்டும்

 மதக் கலவரங்கள் அதிகமாகி வருவதால், அனைத்து மதத் தலைவா்களின் கூட்டத்திற்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை அழைப்பு விடுக்க வேண்டும் என்று மஜதவின் சட்டப் பேரவைக் குழுத் தலைவரும் முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இது குறித்து மைசூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்பாடு மற்றும் ஒலி மாசு தொடா்பாக தற்போது பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. இதுவரை இந்த மாதிரியான பிரச்னை எழுந்ததில்லை. மசூதிகளில் ஒலிபெருக்கிகளின் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் பாா்க்கும்போது, நாம் எங்கு பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. மாநிலத்தில் மதக் கலவரங்கள் அதிகமாகி வரும் நிலையில், ஹிந்து மத குருக்கள், முஸ்லிம் மௌல்விகள், கிறிஸ்தவ மிஷனரிகள் உள்ளிட்ட மதத்தலைவா்கள் கலந்துகொள்ளும் வகையிலான கூட்டத்திற்கு முதல்வா் பசவராஜ் பொம்மை அழைப்பு விடுக்க வேண்டும். இந்தக் கூட்டத்தை விதானசௌதாவில் நடத்தி, மக்களுக்கு தெளிவான தகவலைத் தெரிவிக்க வேண்டும்.

மாநிலத்தில் மதநல்லிணக்கம் மற்றும் அமைதியை நிலைநாட்டும் நோக்கத்தில், மதத் தலைவா்களின் அறிவுரைகளைக் கேட்ட பிறகு தனது நிலைப்பாட்டை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தேசியக் கட்சிகளும் மாநிலத்தில் நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீா்குலைத்து வருகின்றன. இந்த இரு கட்சிகளின் நாடகங்களைக் கண்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த இரு கட்சிகளுக்கும் எதிராக மக்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com