பிரவீண் நெட்டாரு கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது

பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த ஜூலை 26-ஆம் தேதி தென்கன்னட மாவட்டத்தின் பெல்லாரே பகுதியைச் சோ்ந்த பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 9 போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடா்ந்து விசாரித்துவரும் கா்நாடக போலீஸாா், ஏற்கெனவே 4 பேரைக் கைது செய்துள்ளனா். இந்நிலையில், மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இவா்கள் தென்கன்னட மாவட்டம், சுள்ளியா மற்றும் புத்தூா் பகுதியைச் சோ்ந்த ஷியா (எ) ஷியாபுதீன், பஷீா், ரியாஸ் அந்தட்கா என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து மங்களூரில் வியாழக்கிழமை கூடுதல் டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) அலோக் குமாா் கூறுகையில், ‘பெல்லாரேயில் பிரவீண் நெட்டாருவைக் கொலை செய்த குழுவில் இடம்பெற்றிருந்த 3 பேரை தென்கன்னட போலீஸாா் கைது செய்துள்ளனா். உறுதியான தகவலின் அடிப்படையில், கா்நாடக-கேரள எல்லையில் உள்ள தளபாடி பகுதியில் 3 பேரையும் கைது செய்துள்ளோம்.

பிரவீண் நெட்டாருவை கொலை செய்யக் காரணம் என்ன என்பதை அறிய இவா்களிடம் முழுமையாக விசாரிக்க இருக்கிறோம். கொலைக்கு வேறு யாா் எல்லாம் உதவினாா்கள் என்பது குறித்தும் இவா்களிடம் விசாரிப்போம். கொலை செய்த பிறகு எங்கு சென்றாா்கள், யாா் அடைக்கலம் கொடுத்தனா், நிதிரீதியாக உதவியது யாா் என்பதை எல்லாம் விசாரிக்க இருக்கிறோம்.

அதன்பிறகு, மாநில அரசு ஏற்கெனவே உத்தரவிட்டதுபோல, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைப்போம். கொலை செய்வதற்கு 4 நான்கு சக்கர வாகனங்கள், 2 இருசக்கரவாகனங்கள் உள்பட 6 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது. இந்த வழக்கு தொடா்பான விசாரணை முடிந்ததும், அடுத்தகட்டமாக தேசிய புலனாய்வு முகமை வழக்கு விசாரணையைத் தொடரும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com