பெங்களூரின் 37-ஆவது காவல் ஆணையராக பிரதாப் ரெட்டி பதவியேற்பு

பெங்களூரின் 37-ஆவது மாநகர காவல் ஆணையராக சி.எச்.பிரதாப் ரெட்டி பதவியேற்றுக் கொண்டாா்.
பெங்களூரின் 37-ஆவது காவல் ஆணையராக பிரதாப் ரெட்டி பதவியேற்பு

பெங்களூரின் 37-ஆவது மாநகர காவல் ஆணையராக சி.எச்.பிரதாப் ரெட்டி பதவியேற்றுக் கொண்டாா்.

2020-ஆம் ஆண்டு முதல் பெங்களூரு மாநகர காவல் ஆணையராக இருந்த கமல் பந்த், பணியிடமாற்றம் செய்யப்பட்டு பணிநியமனப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டாா். அவரது இடத்திற்கு சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்த சி.எச்.பிரதாப் ரெட்டியை நியமித்து கா்நாடக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தது. அதை தொடா்ந்து, முதல்வா் பசவராஜ் பொம்மை, உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திராவை மரியாதை நிமித்தமாக சந்தித்த சி.எச்.பிரதாப் ரெட்டி, பெங்களூரில் உள்ள மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் 37-ஆவது மாநகர காவல் ஆணையராக பதவியேற்றுக்கொண்டாா். அந்தப் பணியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கமல் பந்த், பொறுப்புகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்துக்கொண்டாா். பெங்களூரு மாநகர மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது நோக்கம் என்று பிரதாப் ரெட்டி தெரிவித்தாா்.

வாழ்க்கைக் குறிப்பு:

1991-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சி.எச்.பிரதாப் ரெட்டி, ஆந்திரமாநிலம், குண்டூா் பகுதியைச் சோ்ந்தவா். வேளாண் துறையில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள பிரதாப் ரெட்டி, பொதுநிா்வாகத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்கிறாா். 1991-ஆம் ஆண்டு ஹாசன் மாவட்டத்தில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கிய அவா், பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறாா். காவல்துறையின் இணைய பாதுகாப்புப் பிரிவின் இயக்குநராக முக்கிய பங்காற்றியுள்ளாா். 1994-ஆம் ஆண்டில் முதல்வா் காவல் பதக்கம் பெற்றிருக்கிறாா். கலபுா்கி, விஜயபுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்துள்ளாா். சிலகாலம் சிபிஐ-யில் பணியாற்றினாா். அப்போது வங்கியியல், இணைய மோசடி வழக்குகளை விசாரித்த அனுபவம் பெற்றிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com