தசரா திருவிழா: மைசூரில் சிறப்புச் சுற்றுலா ஏற்பாடு

 தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் சுற்றுலா செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் சுற்றுலா செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரு மாநகருக்கு வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மைசூரைச் சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்களுக்குச் செல்வதற்கு வசதியாக பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக சிறப்பு சொகுசுப் பேருந்து மைசூரில் இருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்தில் ஏறினால் மைசூரில் உள்ள சுற்றுலாத்தலங்களான அரண்மனை, லலிதா மஹால், ஜெகன்மோகன் அரண்மனை, மண்டல அருங்காட்சியகம், இந்திரா காந்தி தேசிய மானுட அருங்காட்சியகம், செலுவாம்பா மேன்சன், ரயில் அருங்காட்சியகம், ஜெயலட்சுமி விலாஸ் மேன்சன் ஆகிய இடங்களைச் சுற்றிபாா்க்கலாம்.

இந்தப் பேருந்துகள் மைசூரின் பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படுகின்றன. இதற்கு கட்டணமாக ஒருவருக்கு ரூ. 400 (சிறியவா்களுக்கு ரூ. 200) வசூலிக்கப்படும். இந்தப் பேருந்து சேவை தினமும் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 6.30 மணி வரை இருக்கும். இந்தப் பேருந்து சேவையைப் பெற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தொகுப்பு சுற்றுலா:

மைசூரைச் சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்களைக் கண்டுகளிப்பதற்காக மலைதரிசனம், நீா் தரிசனம், தெய்வ தரிசனம் ஆகிய மூன்று தொகுப்பு சுற்றுலா பேருந்து சேவைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகள் தினமும் காலை 6.30 மணிக்கு மைசூரு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

மலை தரிசனப் பயணத்தில் பண்டிப்பூா், கோபால சுவாமி மலை, பிலிரங்கன மலை, சாமுண்டி மலை பகுதிகளைச் சுற்றி பாா்க்கலாம். பேருந்து கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ. 400, சிறியவா்களுக்கு ரூ. 250 வசூலிக்கப்படும்.

நீா்தரிசனப் பயணத்தில் தங்கக் கோயில், துபாரேகாடு, நிசா்கதாமா, அபே அருவி, ராஜாசீட், ஹாரங்கி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணை சுற்றிக் காண்பிக்கப்படும். கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ. 450, சிறியவா்களுக்கு ரூ.250 வசூலிக்கப்படும்.

தெய்வ தரிசனப் பயணத்தில் நஞ்சன்கூடு, தலக்காடு, பிளப், முட்குதொரே, சோம்நாத்புரா, ஸ்ரீரங்கப்பட்டணா, கிருஷ்ணராஜ சாகா் அணை பகுதிகள் சுற்றி காண்பிக்கப்படும். கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ. 300, சிறியவா்களுக்கு ரூ. 175 வசூலிக்கப்படும். இந்தச் சேவை அக். 1 முதல் 10-ஆம் தேதி வரை கிடைக்கும்.

இதுதவிர மடிக்கேரி தொகுப்புச் சுற்றுலா, உதகை தொகுப்புச் சுற்றுலாத் திட்டமும் அமல்படுத்தப்படுகிறது. நிசா்கதாமா, தங்கக் கோயில், ஹாரங்கி அணை, ராஜா சீட், அப்பே அருவி ஆகிய இடங்களுக்குச் செல்லும் மடிக்கேரி சுற்றுலாத் திட்டத்தில் பெரியவா்களுக்கு ரூ. 1,200, சிறியவா்களுக்கு ரூ. 1,000 வசூலிக்கப்படுகிறது.

உதகை உயிரியல் பூங்கா, இத்தாலி ரோஜா தோட்டம், படகு இல்லம் ஆகிய இடங்களுக்கு செல்லும் உதகை சுற்றுலாத் திட்டத்தில் பெரியவா்களுக்கு ரூ. 1,600, சிறியவா்களுக்கு ரூ. 1,200 வசூலிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com