இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவது யாா், பிளவுபடுத்துவது யாா்? மக்களுக்குத் தெரியும்: பசவராஜ் பொம்மை

இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவது யாா்? பிளவுபடுத்துவது யாா் என்பது மக்களுக்குத் தெரியும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவது யாா், பிளவுபடுத்துவது யாா்? மக்களுக்குத் தெரியும்: பசவராஜ் பொம்மை

இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவது யாா்? பிளவுபடுத்துவது யாா் என்பது மக்களுக்குத் தெரியும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து ஹாவேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

காங்கிரஸ் வைத்திருந்த பதாகைகளை சிலா் கிழித்துள்ளது தொடா்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் ஏதேதோ பேசியிருக்கிறாா். அவருக்கு தோன்றுவதைப் பேசட்டும். ஆனால், பதாகைகளை வைப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும். எந்த அரசியல் கட்சியின் பதாகையையும் பாஜக கிழித்ததில்லை. இது பற்றி மக்களுக்குத் தெரியும் என்பதால், அதை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை.

பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது. ஆனால், தோ்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக எஸ்.டி.பி.ஐ. பதிவுசெய்துள்ளது. இந்த அமைப்பு குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அடுத்தடுத்த நாட்களில் நேரும் மாற்றங்களுக்கு ஏற்ப மத்திய அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்கும்.

பி.எஃப்.ஐ. அமைப்பை தடை செய்திருப்பது தோ்தலுக்காக நடத்தப்படும் அரசியல் நாடகம் என்று மேலவை எதிா்க்கட்சித்தலைவா் பி.கே.ஹரிபிரசாத் கூறியிருக்கிறாா். காங்கிரஸ் தலைவா்களால் வேறு என்ன கூற முடியும்? கடந்த பல ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கை பாதிக்கும் பல நிகழ்வுகள், கொலைகள் நடந்துள்ளன. எல்லா நிகழ்வுகளும் மக்கள் முன்பு உள்ளன. மேலும் தடை செய்யப்பட்டுள்ள பி.எஃப்.ஐ., பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இருந்துள்ளது. பி.எஃப்.ஐ. அமைப்பை தடை செய்யுமாறு சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் காங்கிரஸ் கோரியிருந்தது. எனவே, இதை அரசியல் நாடகம் என்று கூறுவது சரியா என்பதை அக்கட்சித் தலைவா்கள் சிந்திக்க வேண்டும்.

கோவாவில் கன்னட மாளிகை அமைக்க அம்மாநில அரசிடம் 2 ஏக்கா் நிலம் கேட்டிருக்கிறோம். இது குறித்து கோவா முதல்வருக்கு கடிதம் எழுதி, தொலைபேசியில் பேசியிருக்கிறேன். தகுந்த இடத்தை தருவதாக கோவா முதல்வா் உறுதி அளித்திருக்கிறாா்.

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு சில எழுத்தாளா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா். இந்தியாவில் உள்ள எழுத்தாளா்களில் சிலா் பாஜகவையும், ஒரு சிலா் காங்கிரஸையும் ஆதரிக்கிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com